மத்திய கிழக்குப் பூசல்: பணவீக்கம் குறித்து சிங்கப்பூர் கவலை

மத்திய கிழக்குப் பூசல்: பணவீக்கம் குறித்து சிங்கப்பூர் கவலை

2 mins read
60892072-9d12-455d-8092-4f2a341a9c5c
ஈரானின் பதில் தாக்குதலால் பஹ்ரேன் தலைநகர் மனாமாவில் சேதமடைந்த கட்டடம். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

மத்திய கிழக்குப் பூசலால் சிங்கப்பூரில் பணவீக்கம் தொடர்பான அச்சம் நிலவுகிறது.

எரிசக்தி விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதே அதற்குக் காரணம். ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை நடத்துவதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு வட்டாரத்திலிருந்து எண்ணெய், எரிவாயு ஏற்றுமதிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

வர்த்தகச் சந்தை திங்கட்கிழமை (மார்ச் 2) மீண்டும் திறக்கும்போது எண்ணெய் விலைக்கு உலகளாவிய அளவுகோலாக இருக்கும் ஓர் அண்டா பிரென்ட் குரூட் (Brent crude) எண்ணெய்யின் விலை கூடுதலாக 20 டாலர் (25.29 வெள்ளி) வரை அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் அமைந்துள்ள வட்டாரத்தில் போர் மூளக்கூடும் என்ற அச்சம் நிலவியதைத் தொடர்ந்து ஓர் அண்டா பிரென்ட் குரூட் எண்ணெய்யின் விலை கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) 2.8 விழுக்காடு கூடி 72.87 டாலராகப் பதிவானது.

ஏற்கெனவே இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து உலக நாடுகளுக்கிடையிலான அரசியல்ரீதியான உறவுகளில் சிக்கல்கள் இருந்ததைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சுமார் 17 விழுக்காடு அதிகரித்துவிட்டது.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் கார் உரிமையாளர்கள் பெட்ரோல் நிலையங்களில் கூடுதல் விலை செலுத்த வேண்டியிருக்கும்.

திரவநிலை இயற்கை எரிவாயு (எல்என்ஜி) எரிவாயு விலை அதிகரித்தால் பாதிப்பும் அதிகமாகிவிடும். சிங்கப்பூரின் மின்சாரத்தில் பெரும்பங்கு இயற்கை எரிவாயுவைக் கொண்டுதான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

சிங்கப்பூருக்கு இயற்கை எரிவாயு பெரும்பாலும் அண்டை நாடுகளிலிருந்துதான் அனுப்பப்படுகிறது. அதேவேளை, எல்என்ஜி படிப்படியாகக் கூடுதல் அளவில் அனுப்பப்பட்டு வருகிறது.

நீண்டகாலத்துக்கு எல்என்ஜி எரிவாயுவைப் பெற சிங்கப்பூர், உலகளவில் ஆக அதிகமான அளவு எல்என்ஜியை ஏற்றுமதி செய்யும் நாடான கத்தாருடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. அதனையொட்டியும் சிங்கப்பூர் பெற்றுவரும் எல்என்ஜியின் அளவு அதிகரித்து வருகிறது.

மத்திய கிழக்குப் பூசல் ஓரிரு வாரங்களுக்குமேல் நீடித்தால் பெட்ரோல் மற்றும் மின்சார விலை, ஒட்டுமொத்தப் பணவீக்கம் ஆகியவற்றின் தொடர்பிலான தாக்கம் சிங்கப்பூரில் உணரப்படும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதேவேளை, குறுகிய காலத்தில் நேரும் இடையூறுகளாலும் கூடுதல் காலத்துக்கு விலை அதிகமாக இருக்க நேரிடலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்உலகம்எண்ணெய்ஈரான்மத்திய கிழக்குஇயற்கை எரிவாயு