மத்திய கிழக்கு வட்டாரத்தில் நீடிக்கும் மோதலால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 120 அமெரிக்க டாலரை நெருங்கிவிட்டது.
இதனால், பணவீக்கம் வெகுவாக அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் உலகளாவிய வட்டி விகிதங்கள் குறித்த எதிர்பார்ப்புகளைச் சிக்கலாக்கியுள்ளது. இதன் காரணமாக, திங்கட்கிழமை (மார்ச் 9) காலை சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையும் தங்க விலையும் சரிவைச் சந்தித்தன.
காலை பங்கு வணிகம் தொடங்கியதும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு 2.9 விழுக்காடு, அதாவது 140.59 புள்ளிகள் குறைந்து 4,707.41 என்றானது. நாளின் முடிவில் 4,752,90 என அது சற்றே மீண்டது.
அனைத்துலக விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமே கடுமையான சரிவை எதிர்கொண்டது. அதன் பங்குவிலை 2.41 விழுக்காடு குறைந்து, 6.49 வெள்ளிக்கு இறங்கியது.
யாங்ஸிஜியாங் கப்பல் கட்டுமான நிறுவனப் பங்கு விலையும் காலையில் கிட்டத்தட்ட ஐந்து விழுக்காடு இறங்கி, $3.99 என்றானது. பின்னர் அது சரிவிலிருந்து மீண்டு $4.10 என முடிந்தது. சென்ற வாரத்தில் அதன் விலை 16 விழுக்காடு ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.
எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களாலும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாலும் எண்ணெய் விலை உயர்ந்து, விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தங்க விலையை எடுத்துக்காட்டும் ‘சிஎன்எம்சி கோல்ட்மைன்’ பங்கு விலை 7.41 விழுக்காடு சரிந்து, $1.75ஆகக் குறைந்தது.
கடந்த ஒரு மாதகாலத்தில் முதன்முறையாக வாராந்தரச் சரிவைப் பதிவுசெய்த தங்கம், ஓர் அவுன்ஸ் 5,130.12 அமெரிக்க டாலராகச் சரிந்தது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மார்ச் 2ஆம் தேதியன்று தங்க விலை ஓர் அவுன்சுக்கு 5,300 அமெரிக்க டாலரைத் தாண்டியது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, திங்கட்கிழமை மற்ற ஆசியப் பங்குச் சந்தைகளும் இறக்கம் கண்டன. ஜப்பானின் நிக்கேய் குறியீடு 5.2 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.
அதுபோல, தைவானின் தையெக்ஸ் குறியீடு 4.43 விழுக்காடும், ஹாங்காங்கின் ஹங் செங் குறியீடு 1.35 விழுக்காடும் சரிவுகண்டன.

