ஈரானுக்கு எதிரான போர் ஆசியப் பொருளியலை நெருக்கடிக்குள் தள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் திங்கட்கிழமையன்று (மார்ச் 24) தெரிவித்தார்.
“தற்போதைய சூழலில், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது ஒரு வகையில் ஆசியாவிற்கான நெருக்கடியாகும்,” என்று அமைச்சர் விவியன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நேர்காணலில், தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ள ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரின் அவசியம் மற்றும் சட்டபூர்வத்தன்மை குறித்து அவர் கேள்விகளை எழுப்பினார். இந்த மோதலால் ஒட்டுமொத்த உலகப் பொருளியலும் பிணைக் கைதியாக மாற்றப்பட்டுள்ளது என்றும் இது நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா, இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யைவிட அதை ஏற்றுமதி செய்யும் அளவு அதிகம். இருப்பினும், ஆசிய நாடுகள் மத்திய கிழக்கின் கச்சா எண்ணெய்யையே பெரிதும் நம்பியுள்ளன என்று அமைச்சர் விவியன் குறிப்பிட்டார்.
இந்தப் பாதிப்பால் சீனா உள்ளிட்ட நாடுகள் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளன. மேலும், இப்பகுதியில் உள்ள பல பெட்ரோகெமிக்கல் ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பாடுகளைக் குறைத்துள்ளன அல்லது கட்டுப்படுத்த முடியாத சூழல் என அறிவித்துள்ளன.
ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படும் எண்ணெய்யில் ஏறத்தாழ 80 விழுக்காடு ஆசிய நாடுகளுக்கே செல்கின்றன என்று ராய்ட்டர்ஸ் தரவுகள் காட்டுகின்றன.
“இந்தப் பாதிப்பு ஏற்கெனவே அறியப்பட்ட ஒன்றுதான். ஆனால், இன்று சோதிக்கப்படுவது போன்ற ஒரு உச்சக்கட்ட நிலையை இது இதற்கு முன் எதிர்கொண்டதில்லை,” என்று அமைச்சர் விவியன் கூறினார்.
“எரிசக்தி உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டால் மத்திய கிழக்கின் எரிசக்தி உள்கட்டமைப்புகளில் நீண்டகால வடுக்களை ஏற்படுத்தும். இதன் விளைவாக எரிசக்தி ஏற்றுமதி நீண்ட காலத்திற்கு குறையும்,” என்று அமைச்சர் விவியன் எச்சரித்தார். இது எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்புக்கும் ஒட்டுமொத்த பணவீக்கத்திற்கும் வழிவகுக்கும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், சிங்கப்பூர் இந்தச் சூழலை எதிர்கொள்ளவும், அதே நேரத்தில் இதில் உள்ள வாய்ப்புகளைக் கண்டறியவும் தனது அவசரகாலத் திட்டங்களைத் தயார் நிலையில் வைத்துள்ளதாக அமைச்சர் விவியன் தெரிவித்தார்.
“தற்போதைய உலகச் சூழலில், ஒருவித நிலைத்தன்மை, கணிப்புத்தன்மை, பாதுகாப்பு ஆகியவை நம்பிக்கையான ஒளியாக இருக்கும்,” என்று அமைச்சர் விவியன் கூறினார்.
“ஆசிய நாடுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதை விரைவுபடுத்த வேண்டும். மின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதுடன் மின்னிலக்க உள்கட்டமைப்பை நவீனப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அரசாங்கக் கருவூலத்தைச் சமமாக வைத்திருப்பதுடன், பொருளியல் வீழ்ச்சியைத் தடுக்கவேண்டும்,” என்று அவர் கூறினார்.

