ஊழியர்களை ஏற்றிச் செல்ல லாரிகளைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளவும் அவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் பயணிகள் இருக்கை, இருக்கைவார் இருப்பதைக் கட்டாயமாக்கவும் அரசாங்கம் கால வரையறை நிர்ணயிக்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் ஊழியர்கள் நல்வாழ்வுக் குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகள், தனிமனிதர்கள் என 40க்கும் மேற்பட்டோர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இவ்வாண்டு ஜூன் 18, 19ஆம் தேதிகளில் நிகழ்ந்த லாரிகள் சம்பந்தப்பட்ட இரு விபத்துகளில் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட 37 பேர் காயமுற்றனர்.
இதன் எதிரொலியாக, ஊழியர்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து வசதி வழங்குவது தொடர்பில் மீண்டும் குரல் எழுப்பப்பட்டுள்ளது.
பிரதமர் லீ சியன் லூங், தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் ஆகியோருக்கு இந்தக் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில், லாரிகளில் ஊழியர்களை ஏற்றிச் செல்ல விதிவிலக்கு அளிக்கும் சட்டப்பிரிவை நீக்கவும் போக்குவரத்து அமைச்சை அவை வலியுறுத்தியுள்ளன.
அப்போதுதான், அனைவருக்கும் ஒரே மாதிரியான பயணிகள் போக்குவரத்து விதிமுறைகள் இருக்கும் என்பது அவ்வமைப்புகளின் வாதம்.
அந்த விதிவிலக்கு ‘பாரபட்சமானது’, ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று குறிப்பிட்டார் ‘டிடபிள்யூசி2’ எனும் புலம்பெயர் ஊழியர்கள் உரிமைக் குழுவின் செயற்குழு உறுப்பினரான டாக்டர் ஸ்டெஃபானி சோக்.
தொடர்புடைய செய்திகள்
“லாரி திடீரென நிறுத்தப்பட்டால் அல்லது வேறு எதனுடனும் மோத நேர்ந்தால் ஊழியர்கள் ஒருவர்மீது ஒருவர் விழ நேரிடலாம், இருக்கையிலிருந்து தூக்கி வீசப்படலாம், அல்லது லாரியிலிருந்து தூக்கி வீசப்படலாம்,” என்றார் டாக்டர் சோக்.
முன்னதாக, ஊழியர்களின் நலனை முன்னிட்டு இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. எல்லா லாரிகளிலும் மழைத் தடுப்பு இருப்பது, லாரி ஓட்டுநர்களாகவும் இருக்கும் ஊழியர்கள் வேலையிடத்தில் ஆறு மணி நேரம் அல்லது அதற்குமேல் வேலை செய்திருந்தால் லாரியை ஓட்டுமுன் குறைந்தது அரைமணி நேரம் ஓய்வளிப்பது உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.