தொழிலாளர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்

தொழிலாளர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்

2 mins read
வெளிநாட்டு ஊழியர் எழுத்தாளர் அமைப்பும் நிகழ்ச்சியில் பங்கெற்றது
a500941d-05bb-4548-bfc4-2e11d4252e90
வெளிநாட்டு ஊழியர் தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில் இசை நிகழ்ச்சி படைத்த பங்ளாதேஷ் ஊழியர்கள். - படம்: எஸிக்கியெல் எல்எஸ் சென்
multi-img1 of 2

வெளிநாட்டு ஊழியர் நிலையம் (MWS) ஏற்பாட்டில் மே 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரர்கள் உட்பட வெளிநாட்டு ஊழியர்கள், இல்லப் பணிப்பெண்கள் ஆகியோர் நூற்றுக்கணக்கில் ஆர்வத்தோடு கலந்துகொண்ட தொழிலாளர் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது.

தாய் செங் வட்டாரத்தில் உள்ள ‘கிரான்ட்ரல் மால்’ எனும் இடத்தில் அந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. வெளிநாட்டு ஊழியர்கள் அவரவர் கலைத் திறன்களை வெளிப்படுத்தும் மேடை நிகழ்ச்சியாக அது அமைந்தது.

வெளிநாட்டு ஊழியர் நிலையம் 2018ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து பணிபுரியும் ஊழியர்கள் அவர்களது கலாசாரம், கலை, திறன் போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்கும் நோக்கத்துடன் நிலையம் அதன் நடவடிக்கைகளை வடிவமைக்கிறது.

லாபநோக்கமற்ற அறநிறுவனமான நிலையம், ஊழியர்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்கவும் அவற்றுக்குத் தீர்வுகளை ஆராய ஒரு தளமாகவும் அமைகிறது.

வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் நிறுவனரான ரிப்பன் சவுத்ரி, ஆண்டுதோறும் ஹோங் லிம் பார்க் பூங்காவில் நடைபெறும் மே (தொழிலாளர்) தின பேரணி உரையில் கலந்துகொள்ளும் வாய்ப்பு பொரும்பாலான ஊழியர்களுக்குக் கிடைப்பதில்லை என்றார்.

எனவேதான் கொண்டாட்ட உணர்வுடன் ஊழியர்களுக்கென தனிப்பட்ட முறையில் அவர்களே பங்கேற்று நிகழ்ச்சிகள் படைக்கும் விதமாக வார இறுதியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அந்த நிகழ்ச்சி இடம்பெற்றது என்று திரு ரிப்பன் விளக்கினார்.

பங்ளாதேஷ் ஊழியர்களின் இசை நிகழ்ச்சியுடன் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நிகித்தா ராய் என்ற பணிப்பெண்ணின் ஆடல் நளினம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

தமிழ்நாட்டின் டிக்டாக் கலைஞர்

தமிழ்நாட்டின் 30 வயது தொழில்நுட்பரான பால முருகனின் விருவிருப்பான நடனமும் பலரது பாராட்டைப் பெற்றது.

துள்ளிக் குதித்து, பல சாகச வித்தைகளை ஆட்டத்தில் வெளிப்படுத்திய பாலா, டிக்டாக் செயலியில் 27,000 ரசிகர்களால் பின்தொடரப்படுபவர். அச்செயலியில் அவர் ‘எபிக்டான்ஸ்பாலா’ என்று அழைக்கப்படுகிறார்.

கடந்த ஆண்டைவிட இரட்டிப்பான எண்ணிக்கையில் இவ்வாண்டு நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான எழுத்தாளர் அமைப்பும் அதன் உறுப்பினர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆதரவு நல்கியது.

செய்தி: எஸிக்கியெல் எல்எஸ் சென் (தப்லா)

குறிப்புச் சொற்கள்