சீனாவில் இருக்கும் குடும்பத்தார் தங்களின் சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைக் காணொளிவழி தெரிவிப்பதைப் பெரிய திரையில் பார்த்தபோது 51 வயது வெளிநாட்டு ஊழியர் ஹாவ் சிங்கன் கண்கலங்கினார்.
ஹுவாங் குலமரபுச் சங்கக் கட்டடத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சீனப் புத்தாண்டு இரவு விருந்தின் சிறப்பு அங்கமாக இந்தக் காணொளி காண்பிக்கப்பட்டது.
இந்த அங்கத்தில் இதுபோன்று காண்பிக்கப்பட்ட மொத்தம் ஐந்து காணொளிகள் வருகையாளர்கள் அனைவரையும் நெகிழ வைத்தன.
சீனா, பங்ளாதேஷ், இந்தியா, மியன்மார், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 150 வெளிநாட்டு ஊழியர்களையும் 50 உள்ளூர் தன்னார்வலர்களையும் இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (26 ஜனவரி) ஒன்றிணைத்தது.
ஹுவாங் குலமரபு சங்கம், ரிவர் வேலி ஹை பள்ளி, சல்வேஷன் ஆர்மி உள்ளிட்ட பங்காளிகளுடன் இணைந்து மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ எனப்படும் உறுதியளித்தல், பராமரிப்பு, ஈடுபடுத்துதல் குழுமம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி, குடும்பத்தை விட்டுப் பிரிந்து சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களை மகிழ்வித்து, அவர்களிடையே தங்களின் வேறுபட்ட கலாசார மரபுகள் பற்றிய புரிதலை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
தம் தாயகத்தில் குடும்பத்தினருடனும் சிறுவயதிலிருந்து பழகிய நண்பர்களுடனும் புத்தாண்டைக் கொண்டாட முடியாததை நினைத்து அவ்வப்போது வருந்தினாலும், இதுபோன்ற நிகழ்ச்சிகள் அந்த வருத்தத்தைத் தணிக்க பேரளவில் உதவுவதாக சிங்கப்பூரில் 20 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் திரு ஹாவ் சொன்னார். மேலும், பல்வேறு தேசங்களைச் சேர்ந்த தமது வெளிநாட்டு ஊழியர் சகோதரர்களுடன் சீனப் புத்தாண்டைக் கொண்டாடியது தமக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்ததாக அவர் சொன்னார்.
மனிதவள மூத்த துணையமைச்சர் டாக்டர் கோ போ கூன் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் மற்றோர் அங்கமாக சீன எழுத்தோவியம் நடவடிக்கையிலும் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் முதன்மையானதாகத் திகழும் ‘லோ ஹே’ விருந்திலும் அவர் பங்கேற்பாளர்களுடன் இணைந்து ஈடுபட்டார்.
மற்ற இனங்களைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களும் இதில் பங்கேற்கத் தன்னார்வலர்கள் அவர்களுக்குப் படிப்படியாக வழிகாட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
“சக குடியேறிகளுக்கு ஆதரவுத் தொடர்புக் கட்டமைப்புகளை அமைத்துக்கொடுக்க எங்கள் முன்னோர்கள் குலமரபுச் சங்கங்களை உருவாக்கினார்கள். அந்த இலக்கைப் பிரதிபலிக்கும் விதத்தில் 2017 முதல் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நாங்கள் ஏற்பாடு செய்து வருகிறோம்,” என்றார் ஹுவாங் குலமரபுச் சங்கத்தின் இளையர்க் குழுவின் பொதுச் செயலாளரும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான ஸ்டான்லி இங், 39.
வெளிநாட்டு ஊழியர்களின் கடின உழைப்பை அங்கீகரித்து நன்றி தெரிவிப்பதற்கும், அவர்களுடன் சமூகத்தினர் நேரடியாகப் பழகிக் கலந்துரையாட வாய்ப்பை வழங்கவும், கலாசார-பன்முக புரிதலை ஊக்குவிக்கவும் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வருவதாக அவர் மேலும் கூறினார்.
பாரம்பரிய சிங்க நடனம், இளைய தன்னார்வத் தொண்டர்கள் வழிநடத்திய மேசை விளையாட்டுகள், ‘கூஸெங்’ இசை நிகழ்ச்சி, பாட்டுக் கச்சேரி போன்ற சிறப்பம்சங்களும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
“இனம், மதம், மொழி என்று எந்த வேறுபாடுமின்றி அனைவரும் ஒன்றுபட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சீனப் புத்தாண்டைக் கொண்டாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார் புதுச்சேரியைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் புருஷோத்தமன் நேரு, 43. கடந்த 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றிவரும் இவர், இவ்வாண்டு ஐந்தாவது முறையாக இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகச் சொன்னார்.
இதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் தீவு முழுவதும் அமைந்துள்ள வெளிநாட்டு ஊழியர் பொழுதுபோக்கு நிலையங்கள் பலவற்றில் ஜனவரி 29ஆம் தேதியும் ஜனவரி 30ஆம் தேதியும் கலாசார நிகழ்ச்சிகள், உள்ளூர், வெளிநாட்டு கலைஞர்களின் இசைக் கச்சேரிகள், உணவு விருந்துகள், திருவிழா நடவடிக்கைகள் உள்ளிட்ட சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.