இணையப் பாதுகாப்புப் பொறியாளராகப் பணிபுரியும் குமார் ரோஹித் ஜரிவால், அலுவலக வாழ்க்கையிலிருந்து தற்காலிகமாக விடைபெற்று, ஆஸ்திரேலியாவின் கரடுமுரடான காட்டுப் பகுதியில் சிங்கப்பூர் ஆயுதப்படையின் ‘வாலபி 2026’ ராணுவப் பயிற்சியில் இரண்டாவது முறையாக ஈடுபட்டுள்ளார்.
2010ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த 40 வயது குமார், புதுடெல்லியைப் பூர்விகமாகக் கொண்டவர்.
சிங்கப்பூர் ஆயுதப்படைத் தொண்டூழியர் படையில் (SAFVC) நான்கு ஆண்டுகளாகச் சேவையாற்றிவரும் ரோஹித், ‘டில்பால் ’ முகாமின் (Camp Tilpa) நுழைவாயிலில் துணைப் பாதுகாப்புப் படை வீரராகச் (Auxiliary Security Trooper) சேவையாற்றி வருகிறார்.
முகாமிற்குள் நுழையும் வாகனங்களையும் மனிதர்களையும் கண்காணிப்பது இவரது முக்கியப் பணியாகும். முகாம் நுழைவாயில் பாதுகாப்பு மட்டுமன்றி, வாகன அணுகல் கட்டுப்பாடு (Vehicle Access Control), ஆள்கள் சரிபார்ப்பு (Personnel Access Control), வாகனத் தளபதி (Vehicle Commander) போன்ற பணிகளிலும் இவர் பயிற்சி பெற்றுள்ளார்.
சுட்டெரிக்கும் வெயில், திடீர் மழை என ஆஸ்திரேலியாவின் கணிக்க முடியாத வானிலைக்கு மத்தியிலும் இவர் இந்தப் பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொள்கிறார்.
சிங்கப்பூருக்குத் தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற ஆழமான விருப்பமே இத்தகைய கடுமையான சூழலைத் தாம் விரும்பி ஏற்கக் காரணம் என்று குமார் கூறினார்.
சிறுவயது முதலே ராணுவத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தீராத தாகம் தனக்கு இருந்ததாகவும், சிங்கப்பூருக்கு வந்த பிறகு கிடைத்த இந்தத் தொண்டூழிய வாய்ப்பை உடனே பயன்படுத்திக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ராணுவத்தின் செயல்பாடுகளை நேரடியாகப் புரிந்துகொள்ளவும், சிங்கப்பூர்ச் சமூகத்துடன் தனது பிணைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவும் இந்தத் தொண்டூழிய வாய்ப்பை அவர் ஒரு பாலமாகப் பயன்படுத்துகிறார்.
கடந்த ஆண்டும் ‘வாலபி 2025’ பயிற்சியில் கலந்துகொண்ட அனுபவம், இந்தப் பயிற்சியில் மேலும் சிறப்பாகப் பணியாற்ற அவருக்குக் கைகொடுக்கிறது.
குடும்பத்தினரை விட்டுப் பிரிவதே இந்த இரண்டு வாரப் பயிற்சிப் பணியில் தமக்குச் சவாலாக இருப்பதாக ரோஹித் கூறினார்.
பாலர் பள்ளியிலும், அடுத்த ஆண்டு உயர்நிலைப் பள்ளியிலும் பயிலவுள்ள இரண்டு மகள்களின் பிரிவை அவர் அதிகம் உணர்கிறார். இருந்தபோதும் குடும்பத்தின் முழுமையான ஆதரவு அவருக்குப் பயிற்சிக் களத்தில் தொடர்ந்து உந்துதலைத் தருகிறது.
“நான் இங்குச் சேவையாற்ற என் மனைவியே முக்கியக் காரணம். இரண்டு பிள்ளைகளைத் தனியாகக் கவனித்துக்கொள்வது எளிதன்று; அவரது ஆதரவிற்கும் தியாகத்திற்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்,” என்று ரோஹித் நெகிழ்ச்சியோடு கூறுகிறார்.
முழுநேர, தேசியச் சேவையாளர்களுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றுவது தமக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாகவும், அவர்களின் பணிச்சுமையைக் குறைத்து சிறிது நேரம் அவர்கள் ஓய்வெடுக்கத் தம்மால் உதவ முடிவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் ரோஹித் தெரிவித்தார்.
