சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், வெளிநாட்டவரைக்கூட நாட்டின் தற்காப்பில் ஈடுபடுத்தும் வகையில் தற்காப்பு அமைச்சு புதிய தொண்டூழியர் நிர்வாகப் பிரிவைத் தொடங்கும் என அறிவித்துள்ளார் தற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான சான் சுன் சிங்.
“இப்புதிய பிரிவு ஏற்கெனவே உள்ள மற்ற பிரிவுகளுடன் இணைந்து செயல்படும். உயர் தயார் நிலையில் இருக்கும் 50,000 வீரர்களுக்கு உதவும் சிறப்புத் திறன்களைக் கொண்ட தொண்டூழியர்களில் மட்டும் இப்பிரிவு கவனம் செலுத்தாது. 250,000 வீரர்கள் உள்ளடங்கிய முழுப் படை, 750,000 முன்னாள் போர்க்காலப் படைவீரர்கள் (ex-NSMen) ஆகியோருக்கு உதவும் புதிய திறன்களையும் சேர்ப்போம்.
“(நம் வீரர்களை ஆதரிக்கும்) 1.5 மில்லியன் குடும்பங்கள், 200,000 நிறுவனங்கள், நம் ஆற்றல்களை விரிவுபடுத்தத் தயாராக உள்ள பற்பல நிரந்தரவாசிகள், வெளிநாட்டவரை ஈடுபடுத்த நம் ஆற்றல்களை வளர்க்கவேண்டும்,” என்றார் அமைச்சர் சான்.
ஜூலை 24ஆம் தேதி இரவு ‘பேரடாக்ஸ்’ ஹோட்டலில் நடந்த தற்காப்பு அமைச்சு தொண்டூழியர் இரவு விருந்து நிகழ்ச்சியில் அவர் அதை அறிவித்தார். தற்காப்பு மூத்தத் துணையமைச்சர் ஸாக்கி முகம்மது, துணையமைச்சர் டெஸ்மண்ட் சூ ஆகியோர் நிகழ்ச்சிக்கு வருகையளித்தனர்.
வெளிநாட்டு உயர்பதவியாளர் ஒருவர் தம்மிடம் கூறியதையும் அமைச்சர் சான் நினைவுகூர்ந்தார். “உங்கள் போர்விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றைக் கண்டு நான் வியக்கவில்லை. ஆனால் உங்கள் போர்க்காலப் படைவீரர்கள் ஒரு நாள் கடினமாக வேலைசெய்த பிறகும் பயிற்சி செய்ய வருகிறார்களே...அவ்வளவு பற்று கொண்ட மக்களைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கண்டுதான் அஞ்சுகிறேன்,” என அவர் கூறியிருந்தார்.
சிங்கப்பூர் ஆயுதப்படையின் 60ம் ஆண்டு நிறைவும் இவ்வாண்டு இடம்பெறுவது மற்றொரு சிறப்பு.
தொண்டூழியர்களின் இன்றியமையாப் பங்கு
தற்காப்பு அமைச்சின் தொண்டூழியர் விருந்தில் அங்கீகரிக்கப்பட்ட 405 தொண்டூழியர்களில் (தற்காப்பு அமைச்சின் 38 வாரியங்கள், செயற்குழுக்களில் உள்ளோர்) ஒருவர் ‘ஹார்ட்வேர் நெட்வர்க்’ (Heartware Network) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷோனா லால்.
நாட்டின் தற்காப்பில் இளையர் பங்கின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் ஷோனா.
தொடர்புடைய செய்திகள்
வளரும்போது தன் தந்தையிடமிருந்து இரண்டாம் உலகப் போர் கதைகளைக் கேட்டு வளர்ந்தார் ஷோனா.
“1942ல் ஜப்பான் சிங்கப்பூரைக் கைப்பற்றிய காலத்தில், வெடிகுண்டுகள் போட்ட சமயத்தில் என் தந்தை பிறந்தார். சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றது, கொன்ஃப்ரொன்டாசி, இனக் கலவரங்கள் போன்றவற்றையெல்லாம் கண்டார்.
“ஆனால் அன்றைய கஷ்டகாலங்களை இன்றைய இளையர்கள் நேரில் காணாததால் நம் இளையர்கள் நாட்டின் தற்காப்பின் முக்கியத்துவத்தைப் போதுமான அளவு உணர்வதில்லை,” என்றார் முன்பு தற்காப்பு அமைச்சு, வெளியுறவு அமைச்சுகளிலும் பணியாற்றியுள்ள ஷோனா.
தற்காப்பு அமைச்சு 1984ல் தொடங்கிய ‘அக்கோர்ட்’ (ACCORD) எனப்படும் சமூக உறவுகள் சார்ந்த ஆலோசனை மன்றத்தில் செயற்குழு உறுப்பினராகப் பங்காற்றிவருகிறார் ஷோனா.
தற்காப்பு குறித்து சமூகத்தின் கருத்துகளைத் தெரிந்துகொள்ளவே ‘அக்கோர்ட்’ தொடங்கப்பட்டது. தற்போது ‘அக்கோர்ட்’டினுள் மூன்று மன்றங்கள் உள்ளன - நிறுவனமும் வர்த்தகமும் (Employer and Business), குடும்பமும் சமூகமும் (Family and Community), கல்விக் கழகங்கள் (Educational Institutions).
நாட்டின் தற்காப்பில் இளையர்களின் அரண்
16,000க்கும் மேற்பட்ட இளையர்கள் ‘ஹார்ட்வேர்’ நடவடிக்கைகளில் வழக்கமாக பங்கேற்பதால், இளையர் அரணுடன் ‘அக்கோர்ட்’டுக்கு ஆதரவு வழங்குகிறார் ஷோனா.
இவ்வாண்டின் முழுமைத் தற்காப்புத் தினத்தையொட்டி நடந்த ‘எஸ்ஜி ரெடி’ பயிற்சியில் ‘ஹார்ட்வேர்’ தொண்டூழியர்கள் பங்கேற்றனர். பின்னிரவு நடந்த பயிற்சியில், அவசர நிலையில் ‘எஸ்எம்ஆர்டி’ ரயிலிலிருந்து எப்படி சுரங்கப்பாதைமூலம் தப்பிப்பது எனக் கற்றுக்கொண்டனர்.
தற்காப்பு அமைச்சு பெண்களுக்காக நடத்தும் முகாமிலும் ‘ஹார்ட்வேர்’ தொண்டூழியர்கள் பங்குபெறுகின்றனர். “ஆண்களைவிடப் பெண்களே ஹார்ட்வேரில் அதிகமாக உள்ளனர்,” எனப் பெருமையுடன் கூறினார் ஷோனா.
ஆண்டுதோறும் போர்க்காலப் படைவீரர்களுக்காகக் (NSMen) கைவினைப் பொருள்கள், கடிதங்களைத் தயாரித்து வழங்குகின்றனர் ‘ஹார்ட்வேர்’ தொண்டூழியர்கள். சமூக ஊடகத் தளங்களிலும் அவ்வீரர்களின் கதைகளைப் பகிர்ந்து, தேசப்பற்றைப் பொதுமக்களிடத்தில் வளர்க்கின்றனர்.
இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பில் 750க்கும் மேற்பட்ட ‘ஹார்ட்வேர்’ தொண்டூழியர்கள் பங்காற்றுவர். ‘டவுன் சிண்ட்ரம்’ கொண்ட ஷோனாவின் மகனும் தொண்டூழியராக, அணிவகுப்புப் பைகளை வழங்குவார்.
தன் மகனுக்கு ‘டவுன் சிண்ட்ரம்’ உள்ளது எனத் தெரிந்தது ஷோனாவின் வாழ்க்கை நோக்கத்தையே மாற்றியது.
“முன்பெல்லாம் சொகுசு நிறைந்த வாழ்க்கையை நாடினேன். ஆனால் அனைத்தும் மாறியது. சமுதாயத்தை இன்னும் பரிவுடன் பார்க்கத் தொடங்கினேன். ‘டவுன் சிண்ட்ரம்’ சங்கத்தின் ஆரம்பகட்ட உறுப்பினர்களில் ஒருவராக இருந்தேன். உடற்குறையுள்ளோருக்கு உதவும் ‘பிஸ்லிங்கிலும்’ பணியாற்றினேன்,” என்றார் ஷோனா.
தன் மகன் 15 வயதில் இருக்கும்போது அவர் தனிமையில் இருப்பதை உணர்ந்த ஷோனா, சிறப்புத் தேவைகள் கொண்டவர்களுக்காக ‘நண்பர்களுக்கான முகாம்’ எனும் முயற்சியையும் தொடங்கினார். அப்போது தொடங்கிய அவரது சமூக சேவைப் பயணம் இப்போது ஹார்ட்வேருக்கு அவரைக் கொண்டுசென்றுள்ளது.
“ஹார்ட்வேரின் நோக்கங்களும் அக்கோர்ட்டின் நோக்கங்களும் ஒருமித்தவகையாக உள்ளன. எதிர்காலத்தில், பள்ளி வகுப்புகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும் இளையர்களையும் அதிகம் சென்றடைய விரும்புகிறோம்,” என்றார் ஷோனா.