சிறு வயதிலிருந்தே சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பணியில் ஈடுபடவும் சீருடைக் குழுக்களில் இணைந்து பணியாற்றவும் வேண்டும் என்பதாக இருந்த தமது கனவு நனவானதை சிங்கப்பூர் ஆயுதப்படை ஆணை அதிகாரி தினேஷ்வரன் சி, 37, பெருமையாகக் கருதுகிறார்.
கடந்த 18 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் இவர், வெள்ளிக்கிழமை (ஜூன் 27) மேஜர் நிலையிலிருந்து லெஃப்டினென்ட் கர்னல் பெற்ற அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
“என்மீது நம்பிக்கை வைத்து எனக்குக் கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். எங்கள் குழுவின் கடின உழைப்புக்கும் தியாகத்துக்கும் கிடைத்த அங்கீகாரம் இது,” என்று சொன்ன இவர், தாம் பங்காற்றிய முக்கியத் திட்டங்களையும் குறிப்பிட்டுப் பேசினார்.
இளையர் விமானப் பயிற்சி மன்றத்தில் தமது பயணம் தொடங்கியதாகச் சொன்ன இவர், அதிகாரிப் பயிற்சி, விமானிப் பயிற்சி உள்ளிட்டவையும் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
காணாமற்போன எம்எச்370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் திட்டக்குழுவில் ‘ஏர்கிராப்ஃட் கேப்டனாக’ பங்காற்றிய இவர், அது மனத்தை உலுக்கும் நிகழ்வாக அமைந்தது என்றார்.
“ஒரு திட்டத்தை வழிநடத்த அன்றாடம் பயிற்சி மேற்கொள்கிறோம். ஆனால், அங்குள்ள உணர்வுகளைக் கையாளப் பயிற்சி ஏதுமில்லை. களத்தில் சென்று, மரணமடைந்தோரின் உடல்களைப் பார்த்தால் என்ன செய்வது, ஏதேனும் அதிர்ச்சியான தகவல் வந்தால் எவ்வாறு கையாள்வது என மனம் குழப்பமாக இருக்கும். இவை ஒருபுறமிருக்க, திட்டமிட்ட பணிகளை விரைவாகவும் சிறப்பாகவும் செய்து முடிக்க வேண்டும் எனும் அவசர நிலையும் இருக்கும்,” என்றார் இவர்.
மேலும், 2015ல் நேப்பாளத்திலும் 2025ல் மியன்மாரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பேரிடர் நிவாரணப் பணிகளிலும் இவர் ஈடுபட்டார். அனுபவம் வாய்ந்த திறன்கொண்ட குழுவாக இணைந்து ஒருவருக்கொருவர் உதவுவது, இப்பணிகளைச் சிறப்பாகக் கையாள உதவியதாகக் கூறினார்.
2021ல் கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவுக்கு உயிர்வாயு சிலிண்டர் விநியோகத் திட்டத்திலும் இவர் பெரும்பங்காற்றியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“அது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்,” என்ற தினேஷ், அதற்கான திட்டமிடுதல் சற்றே மாறுபட்டது,” என்றார். பிற திட்டங்களைப்போல அல்லாமல், பணியாற்றும் குழுவின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு, பணியின் முக்கியத்துவத்திலும் கவனம் செலுத்தி, நுணுக்கமாகத் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டியிருந்தது,” என்றார்.
மேற்கொண்ட அனைத்துப் பயிற்சிகளும் இதற்கு உதவியதாகவும் தினேஷ் கூறினார்.
“சுயநலத்தைக் கடந்து உன்னத நோக்குடன் ஒவ்வொரு நாளும் உந்துதலுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வாய்ப்பு கிடைப்பது தொடர் ஊக்கமாக அமைகிறது. அதில் இன்னும் சிறப்பாகச் செயலாற்ற வேண்டும் எனும் விருப்பம் எழுகிறது,” என்றார் தினேஷ்.
தேசத்திற்குச் சேவையாற்றுவது கடமை
தேசிய சேவையின் முக்கியத்துவத்தை அறிந்து, தேசத்தின் பாதுகாப்புக்காக தமது முன்னோர்கள் பலர் செய்த பணிகளை தாமும் தொடர்ந்து செய்வது தமது கடமை எனக் கருதுகிறார் ஆணை பெற்ற அதிகாரி வினோத் பன்னீர்செல்வம், 38.
2007ல் தேசிய சேவையைத் தொடங்கிய இவர், போர்க்காலப் படையின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் தொடர்ந்து 18 ஆண்டுகளாக அதனை மேற்கொண்டு வருகிறார்.
தலைமை அதிகாரி (ஆஃபிசர் கமாண்டிங்) பொறுப்பில் தொடங்கி தற்போது 480வது சிங்கப்பூர் கவசவாகனப் படை தேசிய சேவைப் பிரிவின் போர்க்காலப் படை மேஜர் நிலையிலிருந்து லெஃப்டினென்ட் கர்னல் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
ஆண்டொன்றுக்கு இரண்டரை முதல் நான்கு வாரங்கள் செயல்படும் இவர், இப்பணிகளை விரும்பி, மகிழ்ச்சியுடன் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
தீயணைப்பு உள்ளிட்ட பிற அவசர வாகனங்களைக் கட்டமைக்கும் பொறியியல் துறையில் பணியாற்றும் இவர், “இளம் வயதில் தேசிய சேவை குறித்த புரிதல் இல்லை. இயன்றவரை மேற்கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால், காலப்போக்கில் கிடைத்த அனுபவங்கள் என்னை இதுவரை கொண்டு வந்துள்ளது,” என்றார்.
சிங்கப்பூர் கவசவாகன தேசிய சேவைப் படை நிறுவப்பட்டபோது அக்குழுவில் பங்காற்றியதாகக் கூறிய இவர், உண்மையான குண்டுகளைப் பயன்படுத்தும் பயிற்சிக்காக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட முதல் குழுவில் தாம் இருந்ததையும் நினைவுகூர்ந்தார்.
தமது குடும்பத்தின் ஆதரவு அளப்பரியது என்றும் இயன்றவரை சேவை மேற்கொள்வது தமது விருப்பம் என்றும் வினோத் சொன்னார்.
தம்மீது நம்பிக்கை வைத்து பதவி உயர்வு அளித்தது, தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் எனும் உறுதி தருவதாகவும் இவர் சொன்னார்.
796 சீருடை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு
தற்காப்பு அமைச்சின் தலைமையகம், ராணுவம், கடற்படை, விமானப்படை, மின்னிலக்க, உளவுத்துறைப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 796 அதிகாரிகள் இவ்வாண்டு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இவர்களுள் முழு நேர, பகுதிநேர அதிகாரிகளும் அடங்குவர். தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் ஏற்பாடு செய்த பதவி உயர்வு வழங்கும் விழா ஜூன் 26, 27ஆம் தேதிகளில் மத்திய ஆள்பலத் தளத்தில் நடைபெற்றது.
மேஜர் ஜெனரல், பிரிகேடியர் ஜெனரல், ராணுவ வல்லுநர்கள், தலைமை வாரண்ட் அதிகாரி உள்ளிட்ட பதவிகளைப் பெறும் அதிகாரிகளுக்கு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் சான்றிதழ்களை வழங்கினார்.
இப்பதவிகள் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும்.