மின்சிகரெட்டுகளை விநியோகம் செய்யும் கும்பலைச் சுகாதார அறிவியல் ஆணையம் கண்டறிந்தது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 6ஆம் தேதியும் 7ஆம் தேதியும் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 8,700க்கும் மேற்பட்ட மின் சிகரெட்டுகளையும் அதன் தொடர்புடைய பொருள்களையும் ஆணையம் பறிமுதல் செய்தது.
தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள், கட்டுப்படுத்தப்பட்ட போதைப் பொருள்கள் அடைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் சிறு பொட்டலங்கள் போன்ற மற்ற சட்டவிரோத பொருள்களும் தேடுதல் வேட்டையின்போது பறிமுதல் செய்யப்பட்டதாக குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையமும் சுகாதார அறிவியல் ஆணையமும் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 24) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
ஜனவரி 6ஆம் தேதி அதிகாலை 12.30 மணியளவில், சிங்கப்பூருக்குள் நுழைய உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக வந்த காரை குடிநுழைவு, சோதனைச்சாவடி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
28 வயது ஆடவர் ஓட்டிய அந்த காரிலிருந்து 5,500க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகள் தொடர்புடைய பொருள்கள் கைப்பற்றப்பட்டன. உடனடியாக அந்தச் சிங்கப்பூரரைக் கைது செய்த அதிகாரிகள் கூடுதல் விசாரணை நடத்துவதற்காக இந்த வழக்கை சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைத்தனர்.
காக்கி புக்கிட் ரோட்டில் இருக்கும் தொழிற்கூடத்திற்கு அந்த மின்சிகரெட்டுகளை விநியோகம் செய்ய அந்த சந்தேக நபர் கொண்டுவந்ததாக ஆணையம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
அந்தத் தொழிற்கூடத்தில் ஜனவரி 7ஆம் தேதி ஆணையம் ஆய்வு நடத்தியது. அங்கிருந்து கூடுதலாக 3,300 மின்சிகரெட்டுகளை அது பறிமுதல் செய்தது.
அந்தப் பொருள்கள் ‘டெலிகிராம்’ மூலம் விற்பனை செய்வதற்காக அந்தக் கூடத்தில் வைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அங்கிருந்த 30 வயது சிங்கப்பூரரும் 24 வயது வெளிநாட்டு மாதும் கைது செய்யப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.