தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்சிகரெட் விற்றதால் புகையிலை விற்பனை உரிமத்தை இழந்த லிட்டில் இந்தியா சிற்றங்காடி

2 mins read
0d681b11-f1d6-4cc5-b993-cf2fe3dc42f1
சிலிகி சாலையில் உள்ள ரியல் மேட் மினிமார்ட்டில் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். அங்கு மின்சிகரெட்டுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். - படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

மின்சிகரெட்டுகளை வைத்திருந்ததாலும் அவற்றை விற்பனை செய்ததாலும் சிலிகி சாலையில் உள்ள சிற்றங்காடியின் (மினிமார்ட்) புகையிலை விற்பனை உரிமம் பறிக்கப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் ஆகஸ்ட் 27ஆம் தேதி தெரிவித்தது.

சிலிகி சாலையில் உள்ள ரியல் மேட் மினிமார்ட்டில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆணைய அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் அங்கு மின்சிகரெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மின்சிகரெட்டை விற்பனை செய்த 24 வயது பெண் காசாளர் ஒருவர் பிடிபட்டார். மற்றொரு பெண் காசாளர் மின்சிகரெட் வைத்திருந்தது தெரியவந்தது. அப்பெண்ணுக்கு 17 வயது.

அந்தச் சிற்றங்காடியில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவை சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

அந்த மளிகைக்கடை உரிமையாளரின் வீடு தெம்பனிஸ் வட்டாரத்தில் இருப்பதாகவும் அங்கு அவர் மேலும் பல மின்சிகரெட்டுகளை வைத்திருந்ததும் கூடுதல் விசாரணையில் தெரியவந்தது.

கேலாங்கில் அவருக்குச் சொந்தமான கைப்பேசிக் கடையிலும் மின்சிகரெட்டுகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மூன்று இடங்களிலிருந்தும் 120க்கும் அதிகமான மின்சிகரெட்டுகளும் அவை தொடர்பான பாகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இத்தகைய குற்றங்களைப் புரிபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.

மின்சிகரெட்டுகளையும் அவை தொடர்பான பாகங்களையும் இறக்குமதி செய்வது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது நிரூபிக்கப்பட்டால் இக்குற்றங்களை முதல்முறையாகப் புரிபவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இக்குற்றங்களை இரண்டாவது முறையாக அல்லது மீண்டும் மீண்டும் புரிபவர்களுக்கு 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை, $20,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மின்சிகரெட்டுகளை வாங்குவதும் வைத்திருப்பதும் குற்றமாகும். இக்குற்றத்தைப் புரிபவர்களுக்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்