தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சரைச் சந்தித்த அமைச்சர் சான் சுன் சிங்

2 mins read
2c19ddf4-3f27-49d6-a7b2-2d73e3aa3ff6
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் (வலது) சிங்கப்பூர்த் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் (இடது) ஆகிய இருவரும் ‌‌ஷங்ரிலா கலந்துரையாடலுக்கு இடையே சந்தித்துக்கொண்டனர். - படம்: சான் சுன் சிங்/ ஃபேஸ்புக்

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், 22வது ‌‌ஷங்ரிலா கலந்துரையாடலுக்கு இடையே தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங்கை வெள்ளிக்கிழமை (மே 30) சந்தித்துள்ளார்.

காலை உணவின்போது சந்தித்துக்கொண்ட திரு சானும் திரு பீட் ஹெக்செத்தும் சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால, தலைசிறந்த இருதரப்பு தற்காப்பு உறவை மறுவுறுதிப்படுத்தினர்.

ஆசிய பசிபிக் வட்டாரத்துடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருப்பதன் முக்கியத்துவத்தை இரு அமைச்சர்களும் வலியுறுத்தினர். வட்டார அமைதி, நிலைத்தன்மை, செழிப்பு ஆகியவற்றுக்கு அது அவசியம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

வட்டாரத்தை அமெரிக்கா அணுக சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவளிப்பதைத் திரு ஹெக்செத் பாராட்டினார். சிங்கப்பூர் ஆயுதப் படை அமெரிக்காவில் பயிற்சி செய்வதற்கு வழங்கப்படும் நீண்டகால ஆதரவுக்கு திரு சான் நன்றி தெரிவித்தார்.

திரு சானும் திரு ஹெக்செத்தும் நேரில் சந்தித்துக்கொள்வது இதுவே முதல்முறை.

கல்வியமைச்சராக இருந்த திரு சான் மே 23ஆம் தேதி நாட்டின் தற்காப்பு அமைச்சராகப் பதவியேற்றார். முன்னாள் ஃபோக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்தின் படைப்பாளரும் ஆஃப்கானிஸ்தான், ஈராக் ஆகிய போர்களின் முன்னோடி வீரராகவும் இருந்த திரு ஹெக்செத், ஜனவரியில் அதிபர் பதவியேற்ற திரு டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தில் தற்காப்பு அமைச்சரானார்.

தாமும் திரு ஹெக்செத்தும் கொலம்பசில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் ஃபோர்ட் பென்னிங் (Fort Benning) தளத்தில் சேவையாற்றியவர்கள் என்பதைத் திரு சான் தமது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

முன்னாள் ராணுவத் தலைவராக இருந்த திரு சான், அமெரிக்காவில் சென்ற முதல் இடம் பென்னிங்தான் என்றார்.

“நாங்கள் புவிசார் அரசியல் மாற்றங்களைக் கலந்துரையாடினோம்,” என்ற திரு சான், “வட்டார அமைதி, நிலைத்தன்மை, செழிப்பு ஆகியவற்றை கட்டிக்காப்பதற்கான கடப்பாட்டை உறுதிப்படுத்திக்கொண்டோம்,” என்றார்.

சனிக்கிழமை (மே 31) நடைபெறும் ‌‌ஷங்ரிலா கலந்துரையாடலின் முதல் அமர்வில் ‘இந்தோ-பசிபிக்கிற்கான அமெரிக்காவின் புதிய லட்சியங்கள்’ என்ற தலைப்பில் திரு ஹெக்செத் உரையாற்றவிருக்கிறார்.

வெள்ளிக்கிழமை பின்னேரத்தில் திரு ஹெக்செத் இஸ்தானாவில் பிரதமர் வாரன்ஸ் வோங்கைச் சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் சிங்கப்பூருக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சிறந்த, நீண்டகால இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

புவிசார் அரசியல் முன்னேற்றங்கள், வட்டார பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் வட்டார அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கான தங்கள் ஒன்றிணைந்த உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர் என்று தற்காப்பு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்