போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லை; சில பள்ளிகளில் மாணவர்களும் குறைவு

அமைச்சர் சான்: எல்லாப் பள்ளிகளிலும் தமிழ்ப்பாடம் நடைமுறைச் சாத்தியமன்று

2 mins read
d2aa627b-07e9-4c70-ae64-4204042ff51a
சொந்தப் பள்ளியில் தமிழ் மொழி கற்க இயலாத மாணவர்களுக்கான மொழிக்கல்வி நிலையங்கள், தமிழ் மொழி புழங்குவதற்கான, செறிவான கற்றலுக்கான சூழலை வழங்குவதாக கல்வியமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எல்லாப் பள்ளிகளிலுமே தமிழ்ப் பாடம் வழங்குவது நடைமுறையில் சாத்தியமற்றது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

உயர்நிலைப் பள்ளிகளில் தமிழை இரண்டாவது மொழியாகப் பயிலும் மாணவர்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் தாங்கள் பயிலும் உயர்நிலைப் பள்ளிகளிலேயே அதனைக் கற்கின்றனர்.

எஞ்சியோர், வட்டார அடிப்படையில் மொழிக்கல்வி நிலையங்களாகச் செயல்படும் 11 பள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் அல்லது உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் தமிழ் பயில்வதாகத் திரு சான் குறிப்பிட்டார்.

சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம், உயர்நிலைப் பள்ளிகளில் தாய்மொழி கற்றல் குறித்து எழுப்பிய கேள்விக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் திரு சான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்குச் சராசரியாக, குறிப்பிட்ட தாய்மொழியைப் பாடமாக வழங்காத உயர்நிலைப் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாறுவது தொடர்பில் எத்தனை விண்ணப்பங்கள் கல்வி அமைச்சுக்கு வருகின்றன என்று திரு ஸுல்கர்னைன் கேட்டார்.

அத்துடன், கல்வியமைச்சு இந்த முறையீடுகளின் எண்ணிக்கையைக் கண்காணித்து, குறிப்பிட்ட தாய்மொழிப் பாடத்திற்கான தேவை பெருகும்போது அந்தப் பாடத்திற்குக் கூடுதல் வளங்களை ஏற்படுத்தித் தருமா என்றும் அவர் கேட்டிருந்தார்.

தற்போது, சீன, மலாய் மொழிகளைக் கற்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் எல்லோரும் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே அம்மொழிகளைக் கற்கின்றனர். தமிழ் மொழிப் பாடம் எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும் இல்லை என்றாலும் பெரும்பாலான உயர்நிலைப் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

“தமிழ் மொழி ஆசிரியர்களின் எண்ணிக்கை, குறைந்த அளவில் உள்ளது. சில பள்ளிகளில் தமிழுக்கான தேவையும் குறைவாக உள்ளது,” என்று அமைச்சர் சான் குறிப்பிட்டார்.

“தங்களது உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பாடம் வழங்கப்படாததால் மற்ற பள்ளிகளுக்கு மாறுவது தொடர்பில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்குச் சராசரியாக நான்கு விண்ணப்பங்களைக் கல்வியமைச்சு பெற்றுள்ளது,” என்று அவர் கூறினார்.

தங்கள் பள்ளியிலேயே தமிழ் மொழி கற்க இயலாத மாணவர்களுக்கான மொழிக்கல்வி நிலையங்கள், தமிழ் மொழியைப் புழங்குவதற்கான, செறிவான கற்றலுக்கான சூழலை வழங்குவதாக அமைச்சர் சொன்னார்.

“தாய்மொழி கற்றலைத் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே பெறும் நோக்கில் பள்ளி மாறுவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் போக்கைக் கல்வி அமைச்சு கண்காணித்து வருகிறது. ஆசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையின்போதும் பணியமர்த்தும்போதும் அமைச்சு இதனைக் கருத்தில் கொள்கிறது. ஆயினும், சில பள்ளிகளில் தமிழ் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் மொழிப் பாடத்தை வழங்குவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது,” என்று திரு சான் விளக்கம் அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்