ஆசியான் - சீனா ஒத்துழைப்பை வலுப்படுத்த அமைச்சர் சீ வலியுறுத்து

ஆசியான் - சீனா ஒத்துழைப்பை வலுப்படுத்த அமைச்சர் சீ வலியுறுத்து

2 mins read
11e973b7-7c1b-4485-8837-030d858d41ee
மலேசியாவின் ஈப்போ நகரில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெற்ற நான்காவது ஆசியான்-சீனா கட்டுமானம், வீடமைப்பு அமைச்சர்நிலை வட்டமேசை மாநாட்டில் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் (இடமிருந்து 5வது) கலந்துகொண்டார். - படம்: ஃபேஸ்புக்/சீ ஹொங் டாட்
multi-img1 of 2

ஈப்போ: ஆசியானும் சீனாவும் தங்களின் கூட்டுநலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று சிங்கப்பூர் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் வலியுறுத்தி இருக்கிறார்.

மலேசியாவின் ஈப்போ நகரில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெற்ற நான்காவது ஆசியான்-சீனா கட்டுமானம், வீடமைப்பு அமைச்சர்நிலை வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு திரு சீ உரையாற்றினார்.

எக்காலத்திற்கும் ஏற்ற நகரங்களைக் கட்டமைக்க அனைத்துலக ஒத்துழைப்பு மிக அவசியமானது என்று தாம் சுட்டிக்காட்டியதைத் தமது ஃபேஸ்புக் பதிவு வழியாக அவர் பகிர்ந்துகொண்டார்.

“சீனாவுடனான எங்களது ஒத்துழைப்பில், ‘சீனா-சிங்கப்பூர் தியான்ஜின் சூழலியல் நகரம்’ திட்டம் மிகச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது. வெறும் யோசனைகளைப் பரிமாறிக் கொள்வதோடு நின்றுவிடாமல் இருநாட்டு நிறுவனங்களுக்கும் குடிமக்களுக்கும் பயனளிக்கும் தீர்வுகளை இணைந்து உருவாக்க முடியும் என்பதை அத்திட்டம் நிரூபித்துள்ளது,” என்று அவர் கூறினார்.

வட்டமேசை மாநாட்டின் இணை அமைப்பாளர்களான மலேசிய வீடமைப்பு, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் மற்றும் சீனாவின் வீடமைப்பு, நகர்ப்புற, ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நி ஹோங் ஆகியோரை அமைச்சர் சீ சந்தித்துப் பேசினார்.

நகரங்களின் வாழத்தகுந்த நிலையை மேம்படுத்துவதில் சிங்கப்பூரும் மலேசியாவும் ஒரே இலக்கைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், “வீடமைப்பு, நிலப்பரப்பு வடிவமைப்பு, கட்டுமானத் தொழில்நுட்பம், நகரப்புறத் திட்டமிடல் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றில் இருதரப்புக் கற்றலை ஆழப்படுத்துவது குறித்து அமைச்சர் ஙாவுடன் நல்ல உரையாடல் அமைந்தது,” என்றார்.

சீன அமைச்சர் நி ஹோங் உடனான சந்திப்பு குறித்துக் கருத்துரைத்த அவர், “இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம்,” என்று கூறினார்.

முன்னதாக, ஜூலை 30ஆம் தேதி கோலாலம்பூரில் மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நசீரையும் பிரதமர் அலுவலக அமைச்சர் ஹன்னா யோவையும் திரு சீ சந்தித்துப் பேசினார். அப்போது ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம், போக்குவரத்து இணைப்பு மற்றும் பழைய கட்டடங்களைப் புதுப்பித்துச் சமூக இடங்களாக மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாசீ ஹொங் டாட்சிங்கப்பூர்கட்டுமானம்வீடமைப்புசீனாஆசியான்தேசிய வளர்ச்சி அமைச்சு