கல்வி அமைச்சர்: இணையம் வழி துன்புறுத்தல் புகார்கள் உயரக்கூடும்

கல்வி அமைச்சர்: இணையம் வழி துன்புறுத்தல் புகார்கள் உயரக்கூடும்

1 mins read
49f9c6b8-3b8f-4bb4-97f0-6505f9e662ea
ஒவ்வொரு 1,000 மாணவர்களுக்கு வருடாந்திர சராசரியாக தொடக்கப்பள்ளிகளில் இரண்டு துன்புறுத்தல் சம்பவங்களும் உயர்நிலைப்பள்ளிகளில் ஆறு துன்புறுத்தல் சம்பவங்களும் பதிவாகியிருப்பதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் குறிப்பிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இணையம் வழி துன்புறுத்தல் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை படிப்படியாக உயரக்கூடும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

இணையம் வழி துன்புறுத்தல் பற்றி பொதுமக்களிடையே கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.

நேரடித் துன்புறுத்தல் தொடர்பான புகார்களைவிட இணையம் வழி துன்புறுத்தல் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அமைச்சர் சான் தெரிவித்தார்.

இணைய துன்புறுத்தல் பற்றி அவ்வளவாகத் தெரியாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அக்டோபர் 14ஆம் தேதியன்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

துன்புறுத்தல் சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை சீராக இருப்பதாக திரு சான் கூறினார்.

ஒவ்வொரு 1,000 மாணவர்களுக்கு வருடாந்திர சராசரியாக தொடக்கப்பள்ளிகளில் இரண்டு துன்புறுத்தல் சம்பவங்களும் உயர்நிலைப்பள்ளிகளில் ஆறு துன்புறுத்தல் சம்பவங்களும் பதிவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இவை அனைத்து வகை துன்புறுத்தல்களையும் உள்ளடக்குவதாக அவர் தெரிவித்தார்.

துன்புறுத்தல் தொடர்பாகப் புகார் அளிக்கப்படும்போது அதுகுறித்து பள்ளி தீவிர விசாரணை மேற்கொள்வதாக அமைச்சர் சான் கூறினார்.

அதையடுத்து தகுந்த நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

கடுமையான துன்புறுத்தல் சம்பவங்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சர் சான் கூறினார்.

துன்புறுத்தும் மாணவர் அல்லது துன்புறுத்தப்பட்ட மாணவருக்கு ஆசிரியர்களும் பள்ளி ஆலோசகர்களும் உணர்வுபூர்வ ஆதரவு வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

மறுவாழ்வு முயற்சிகளில் பெற்றோருக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர்கள் கல்வி அமைச்சுடன் இணைந்து மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அமைச்சர் சான் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்