சமூக மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் ஆற்றல்மிகு வகையில் செயல்படுவதற்கு ஏதுவான வழிவகைகளை இஸ்லாமியக் கல்வி முறை கண்டறிய வேண்டும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) காலை தொடங்கிய சிங்கப்பூர் இஸ்லாமியக் கல்லூரி கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற உள்துறைக்கான மூத்த துணை அமைச்சருமான திரு ஃபைஷால், மாறிவரும் உலகில் திறம்படச் செயலாற்றுவதற்கு ஏதுவாக சிங்கப்பூரின் இஸ்லாமிய கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் உரையாற்றினார்.
‘‘சிங்கப்பூரின் பன்முகத்தன்மைமிக்க சூழலை மேலும் செழிப்புறச் செய்யும் வகையில் வருங்கால சமய ஆசிரியர்களை ஆற்றல்மிக்கவர்களாக திகழச் செய்ய புதிய வழிகளை அறிய வேண்டும்.
‘‘அவ்வகையில், அவர்களுக்கு ஆழமான சமய அறிவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சமகாலப் பிரச்சினைகளை அறிவார்ந்த வகையில், அக்கறையுடன் பொருத்தமான முறையிலும் கையாள்வதற்கான திறன்களையும் வழங்க வேண்டும்.
‘‘இதன் மூலம் இஸ்லாம் சமயத்தை நம்பிக்கையுடன் பின்பற்றி, நாம் வாழும் சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்கக்கூடிய வலுவான மற்றும் மீள்திறன் வாய்ந்த சமூகத்தை உருவாக்க முடியும்,’’ என்று நம்பிக்கை தெரிவித்தார் திரு ஃபைஷால்.
‘‘தொடர்ந்து பேசிய அவர், இந்த எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து அவை உயிர்பெறச் செய்யும் இலக்குடன் சிங்கப்பூர் இஸ்லாமிய சமயக் கல்லூரி (எஸ்சிஐஎஸ்) நிறுவப்படுகிறது,” என்றார்.
சமயம் சார்ந்த அறிவுத்திறனைப் பெற்றிருக்கும் அதே வேளையில், சிங்கப்பூரின் தனித்துவமிக்க பன்முகக் கலாசாரத்திற்கு ஏற்ற வகையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு சேவையாற்றி, உயர்கல்விக்கான முன்னணி கல்விக் கழகமாக இருப்பதற்கு ‘எஸ்சிஐஎஸ்’ நோக்கம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பன்முகத்தன்மைமிக்க சமூகங்களுக்கான இஸ்லாமிய உயர்கல்வியை, பாடத்திட்டத்தின் மூன்று முக்கிய அடித்தளங்களான, துறைகளுக்கு இடையிலான அணுகுமுறை, சூழலுக்கு ஏற்ப வடிவமைத்தல், பயன்முறை ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலம் மறுசீரமைப்பதில் இக்கருத்தரங்கம் கவனம் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கருத்தரங்கின் சிறப்புரைகள், மாணவர்கள் உள்ளிட்ட எதிர்கால சமய ஆசிரியர்கள் பல்வேறு துறைகளில் அறிவைப் பெறுவதற்கும், வெவ்வேறு தரப்பினருடன் இணைந்து பணியாற்றுவதற்கும், மெய்யுலகச் சவால்களுக்கு சமய-நெறிமுறைக் கோட்பாடுகளை பயன்படுத்துவதற்கும் கல்லூரி எப்படி வழிகாட்டுகிறது என்பது குறித்த தெளிவை இந்த கருத்தரங்கம் சிந்தித்தது.
‘எஸ்சிஐஎஸ்’ ஒருங்கிணைத்த இந்த அறிமுகக் கருத்தரங்கில் சமூகத் தலைவர்கள், பேராளர்கள், மதரசா மாணவர்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின்போது, திரு அப்துல்லா தர்முகி தலைமையிலான ‘எஸ்சிஐஎஸ்’ ஆளுநர் சபை, மற்றும் முஃப்தி டாக்டர் நசிருதின் முகம்மது நசிர் தலைமையிலான வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கான பட்டியலை திரு ஃபைஷால் வெளியிட்டார்.
அதன்படி ஆளுநர் சபையில் 12 உறுப்பினர்களும் வழிகாட்டுதல் குழுவில் 19 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

