விஷ்ருதா நந்தகுமார்
மக்கள் செயல் கட்சி அரசாங்கம், அனுபவத்தின் அடிப்படையில் அல்லாது, கொள்கைகளின் அடிப்படையில் ஆளும் அரசாங்கம் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
யூசோஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை (மே 1) நடைபெற்ற மசெக பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அரசாங்கத்தைக் கேள்வி கேட்டு அழுத்தம் தர முடியும் என்ற பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கின் கருத்தை அவர் சாடினார்.
“முதலில் நாடாளுமன்றத்தில் மாற்றுக் குரல் தேவை என்று பாட்டாளிக் கட்சி வாதாடியது. சிங்கப்பூரின் நாடாளுமன்ற கட்டமைப்பின்படி, மாற்றுக் குரல் அவசியம் என்று பதிலளித்ததும், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அரசாங்கத்தைக் கேள்வி கேட்டு அழுத்தம் தர முடியும் என்று தனது வாதத்தை அது மாற்றிக்கொண்டது,” என்று பாட்டாளிக் கட்சியின் நிலையற்ற வாதத்தை அமைச்சர் இந்திராணி சுட்டிக்காட்டினார்.
தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்துகொண்டு, எவ்வாறு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சார்ந்த ஹேசல் புவாவும் லியோங் மன் வாயும் தங்கள் கேள்விகளையும் கருத்துகளையும் முன்வைத்து அரசாங்கத்தை வழிநடத்தினர் என்று குமாரி இந்திராணி கேள்வியெழுப்பினார்.
“திரு பிரித்தம் சிங்கின் கருத்து உண்மையெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாவதற்கு முன்பு, பாட்டாளிக் கட்சி ஏன் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ஏற்றுக்கொண்டது?” என்று குமாரி சில்வியா லிம்மையும் திரு ஜெரால்ட் கியாமையும் எடுத்துக்காட்டுகளாக அவர் குறிப்பிட்டார்.
பாட்டாளிக் கட்சியின் கூற்றுகளை உற்றுக் கவனிப்பது மிகவும் முக்கியம் என்றும், பிரசார ஓய்வு நாளன்று அவற்றைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்றும் வாக்காளர்களை அவர் ஊக்குவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், துணைப் பிரதமர் கான் கிம் யோங் கொவிட்-19 தொற்றுப் பரவலின்போது நடைமுறைப்படுத்திய செயல்திட்டங்களையும் அமைச்சர் இந்திராணி வெகுவாகப் பாராட்டினார்.
“துணைப் பிரதமர் கான் அதிகம் பேசமாட்டார்; ஆனால் செயலில் காட்டுவார்,” என்று கூறி, பொங்கோல் குழுத்தொகுதி மக்களை வழிநடத்தத் திரு கானே பொருத்தமானவர் என்று அவர் உறுதிபடக் கூறினார்.
தற்காப்பு அமைச்சுக்கான மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மதும் திரு கானுக்கு ஆதரவாகப் பேசி, வாக்கு சேகரித்தார்.
“திரு கான் இரண்டு இளைய அமைச்சர்களை வழிநடத்தினார். ஒருவர் இன்று நம் பிரதமர். மற்றொருவர் சுகாதார அமைச்சர். தலைமைத்துவத்திற்கான வரையறையாக, மற்றவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களை வழிநடத்துவதே அவரின் சிறப்பு. சிங்கப்பூரின் முன்னேற்றத்தை முன்னிறுத்தி, ஒன்றிணைந்த மக்களாகச் சிங்கப்பூரர்கள் செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த இலக்கோடு அவர் பாடுபடுவார்,” என்று திரு ஸாக்கி உறுதியளித்தார்.