சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சிஜக) முன்மொழிந்துள்ள சுகாதாரப் பராமரிப்பு சார்ந்த திட்டங்கள் சாத்தியமற்றவை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சாடியுள்ளார்.
பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நாள் நெருங்கும் வேளையில், மக்கள் செயல் கட்சியின் செம்பவாங் குழுத்தொகுதி, செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி வேட்பாளர்களுக்கான இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஓங்.
புதன்கிழமை (ஏப்ரல் 30) மாலை எவர் கிரீன் பள்ளியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய திரு ஓங், ‘சிஜக’ வின் சுகாதாரப் பராமரிப்புத் திட்டங்கள் நடைமுறைக்கு ஏற்றவையல்ல என்று கூறியதுடன், ஒரு தரப்பே சுகாதாரப் பராமரிப்புக்கான செலவினத்தைச் செலுத்தும் வகையில் அக்கட்சி முன்வைத்துள்ள திட்டங்களின் சாத்தியக்கூறு குறித்துக் கேள்வி எழுப்பினார்.
“தற்போது மெடிஷீல்டு, மெடிசேவ் மூலம் அரசாங்க மானியம் வழியாகச் செலுத்தப்பட்டுவரும் சுகாதாரக் கட்டண அமைப்பு முறையை எளிதாக்க சிஜக வைத்துள்ள திட்டங்கள் காப்புறுதிக்கான தொகையை அதிகரித்துவிடும்,” என்றார் அமைச்சர்.
“தற்போதைய கட்டண முறை முக்காலி போன்றது; அதனால் அவ்வமைப்பு நிலையாகத் திகழ்கிறது. ஆனால் சிஜக தலைவரும் மருத்துவருமான திரு பால் தம்பையா அதில் சுகாதாரக் காப்புறுதி மட்டும் போதும் என்கிறார்.
“அது மெடிஷீல்டு லைஃப்-ஐக் காட்டிலும் பெரியது என்றும் சொல்கிறார். அவர்களின் இக்கருத்துக்கு அரசு செவிமடுத்தால், சந்தாத் தொகை பேரளவாகிவிடும்,” என்று திரு ஓங் கூறினார்.
கட்டணங்களை இலகுவாக்க மூன்று சுகாதாரப் பராமரிப்புக் குழுக்களை இணைப்பது, மனநல சிகிச்சையை தேசியமயமாக்குவது உள்ளிட்ட ‘சிஜக’வின் இதரத் திட்டங்களின் சாத்தியம் குறித்தும் அவர் சந்தேகம் எழுப்பினார்.
இந்தத் தேர்தலின்போது தமது பணியின் ஒரு முக்கிய அங்கம், எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் திட்டங்களைச் சிங்கப்பூரர்கள் ஆராய்ந்து விசாரிக்கவும் அவர்கள் குழப்படையாமல் இருக்கவும் உதவிக்கரம் நீட்டுவதாகும் என்றார் திரு ஓங் .
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூருக்குத் தேவை வலுவான எதிர்க்கட்சியன்று, வலுவான அரசாங்கம்தான் என்ற திரு ஓங், மக்கள் மசெக விற்கு உறுதியான ஆதரவை நல்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.