தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உழைக்கும் மக்களை அரசாங்கம் ஆதரிக்கும்: அமைச்சர் சண்முகம்

2 mins read
துணைப் பிரதமர் கான் கிம் யோங் அரசாங்கத்தில் தொடர்ந்து இருக்க வேண்டியது அவசியம் என்கிறார்.
4e59a278-5f8a-4d9a-bf2f-0ebde4a546c0
வாழ்க்கைச் செலவினம் குறித்தும் பேசிய அமைச்சர் சண்முகம், சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலை கிடைக்க உறுதி செய்வதே அவர்களுக்கு உதவுவதற்கான ஆகச் சிறந்த வழி எனத் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேலை, வாழ்க்கைச் செலவினம் குறித்த சிங்கப்பூரர்களின் கவலைகளைக் களையப் பாடுபடுவோம் என்றும் உழைக்க விரும்பும் சிங்கப்பூரர்களை அரசாங்கம் நிச்சயம் பார்த்துக்கொள்ளும் என்றும் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்க வர்த்தக வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலையை ‘இக்கட்டான சூழல்’ என்று திரு சண்முகம் தமிழில் வருணித்தார்.

வர்த்தக, தொழில் அமைச்சரும் துணைப் பிரதமருமான திரு கான் கிம் யோங்கிற்கும் அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹவர்ட் லட்னிக்கிற்கும் இடையிலான கலந்துரையாடல்கள் நல்லவிதமாகப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

துணைப் பிரதமர் கான் தொடர்ந்து அரசாங்கத்தில் இருந்தால், சிங்கப்பூரில் வேலைகளைத் தொடர்ந்து கட்டிக்காக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஈசூன் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) மாலை நடைபெற்ற நீ சூன் குழுத்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சி பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது திரு சண்முகம் இவ்வாறு கூறினார்.

அவருடன் முதன்முறை வேட்பாளர்களாக ஜாக்சன் லாம், லீ ஹுய் யிங், சையது ஹருன் அல்ஹப்ஷி, கோ ஹன்யான் ஆகியோர் நீ சூனில் களமிறங்கியுள்ளனர். அவர்களுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வாவும் மேடையேறி ஆதரவு திரட்டினார்.

சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலை கிடைக்க உறுதிசெய்வதே அவர்களுக்கு உதவுவதற்கான ஆகச் சிறந்த வழி என்றார் திரு சண்முகம்.

இருந்தபோதும், தேவைப்படும் நேரங்களில் அரசாங்கம் கூடுதல் ஆதரவு தரவேண்டும் என்ற அவர், கடந்த இரண்டு வரவு செலவுத்திட்டங்களிலும் ஆதரவுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.

“மக்கள் அச்சப்படத் தேவையில்லை. பொருளியல், வேலைகள், வாழ்க்கைச் செலவினம் என எதுவாக இருந்தாலும் உழைக்க நீங்கள் தயாராக இருந்தால் அரசாங்கமும் உங்களைப் பார்த்துக்கொள்ளும்,” என்று அவர் கூறியுள்ளார்.

இலவசங்களுக்காக எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கும் சிங்கப்பூரின் கையிருப்பு நிதியிலிருந்து பணத்தைப் பயன்படுத்தும் அவர்களது யோசனைகளுக்கும் எதிராகத் திரு சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பணம் செலுத்தாமல் செலவு செய்வது என்ற போக்கு, நாட்டின் எதிர்காலத்தையும் நம் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதித்துவிடும் என்று அவர் சொன்னார்.

“உண்மையைச் சொல்வதெனில், நாம் வெற்றிகரமாக இருக்கிறோம். நாங்கள் உண்மையை எதிர்கொள்பவர்கள்,” என்றார் திரு சண்முகம்.

பொருள், சேவை வரி உயர்வு குறித்துப் பேசிய திரு சண்முகம், அந்த வரியின் பெரும்பகுதியை, அதிக வருமானம் ஈட்டுவோரில் முதல்நிலையிலுள்ள 20 விழுக்காட்டினரும் வெளிநாட்டவரும் செலுத்துவதாகக் கூறினார்.

வசூலிக்கப்படும் அந்த வரித்தொகை, அரசாங்கத் திட்டங்களின் வழியாக வசதி குறைந்தோருக்கு வழங்கப்படுகிறது என்றும் பிரசாரக் கூட்டத்தில் திரண்டிருந்த மக்களிடம் திரு சண்முகம் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்