தமது தொண்டூழியர்களின் இரவு விருந்துக்கு உணவு வழங்குவதற்காக கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் பே யாம் கெங் வீட்டில் இருந்தபடி சுயத்தொழிலில் ஈடுபடுவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தெம்பனிஸ் குழுத்தொகுதியில் தமது மக்கள் சந்திப்புக் கூட்டத்துக்கு முன்பு தொண்டூழியர்களின் உணவு விருந்துக்காக அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 29) அவர் ஃபேஸ்புக்கில் இந்த அழைப்பை விடுத்தார். சுமார் 20 பேருக்கு ஹலால் உணவு தேவை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். பலகாரங்கள், முதன்மை உணவு வகைகள் (staples), உணவுக்குப் பின்பு உட்கொள்ளப்படும் சிற்றுண்டி வகைகள் (dessert) போன்றவை தேவைப்படும் என்று திரு பே விவரித்திருந்தார்.
திரு பேயின் மக்கள் சந்திப்புக் கூட்டங்கள் திங்கட்கிழமைதோறும் தெம்பனிஸ் ஸ்திரீட் 62ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் 646Bல் நடைபெற்று வருகின்றன. பொது விடுமுறை நாள்கள், சில மாதங்களில் வரக்கூடிய ஐந்தாவது திங்கட்கிழமை ஆகிய நாள்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.
இச்செலவைத் தாம் ஏற்றுக்கொள்வதாக திரு பே, மதர்ஷிப் ஊடகத்திடம் தெரிவித்தார். ஒவ்வொரு உணவு விருந்துக்கும் அதிகபட்ச விலை 100 வெள்ளியாக இருக்கும்.
ஃபேஸ்புக்கில் இந்த அழைப்பை விடுத்து ஒரு நாள்கூட நிறைவடையாத நிலையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 10 தரப்புகள் உணவு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன.
தமது தொண்டூழியர்கள் ஆற்றும் பங்கை அங்கீகரிக்கும் நோக்கில் அவர்களுக்கு உணவு வழங்கக் கடந்த ஆறு மாதங்களாகத் தாம் ஒருவருக்குக் கட்டணம் தந்து வருவதாக மதர்ஷிப்பின் கேள்விகளுக்கு திரு பே பதிலளித்தார். சம்பந்தப்பட்ட தொண்டூழியர்கள் பொதுவாக வேலை முடிந்தவுடன் மக்கள் சந்திப்புக் கூட்டத்துக்கு விரைந்து செல்பவர்கள்.
இதுவரை தெம்பனிசில் உள்ள பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளி ஒன்றில் பணியாற்றும் சமையல்காரர், தொண்டூழியர்களுக்கு உணவைத் தயார்செய்து வந்தார். அந்த பாலர் பள்ளி இருக்கும் இடத்தைதான் தெம்பனிசுக்கான மக்கள் செயல் கட்சிப் (மசெக) பிரிவு வாடகைக்கு எடுத்து மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே உணவு வழங்கி வந்த சமையல்காரர் தனது பேரப் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளவிருப்பதால் இனி அவரால் உணவளிக்க முடியாது என்பதை திரு பே கடந்த வார இறுதியில்தான் தெரிந்துகொண்டார்.

