துறை மாறுவதில் சவால்களை எதிர்கொள்ளும் ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் புதிய திறன்களைப் பெற்றும் பொருத்தமான வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கும் உதவ மனிதவள துணை அமைச்சர் ஃபூ செஸியாங் விரும்புகிறார்.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவர், தமது தொகுதியில் அத்தகையோரைச் சந்தித்துள்ளார். செப்டம்பர் 1ஆம் தேதி எரிசக்தி, வர்த்தக, தொழில்துறைப் பொறுப்புகளுடன் மனிதவளத் துறைப் பொறுப்பையும் ஏற்ற அவர், தமது புதிய பொறுப்பின் மூலம் அவ்விவகாரங்களுக்குத் தீர்வுகாண விரும்புகிறார்.
புதிய துறைகளுக்கு வேலை மாறுவோருக்கு அரசாங்கம் ஆதரவளிக்க நோக்கம் கொண்டுள்ளதாக 41 வயது திரு ஃபூ தெரிவித்தார்.
புள்ளிவிவரங்களின்படி, ஊழியரணிக்கு மீண்டும் திரும்புவது கடினமாகி வருவதையும் ஆட்களை வேலைக்கு எடுக்கும் துறைகள் மாறிக்கொண்டே இருப்பதையும் அவர் சுட்டினார்.
இந்த நிலையில், ஒருவரின் அடுத்த வேலை வேறு ஒரு துறையில் அமையக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளது. குறைந்த சம்பளம் பெறுவது, அறிவுசார் ரீதியாகவும் மனித உறவுகள் ரீதியாகவும் பலவற்றையும் மீண்டும் முதலிலிருந்தே தொடங்க வேண்டிய தயக்கம் உள்ளிட்ட சவால்கள் இருக்கக்கூடும் என்றும் திரு ஃபூ கூறினார்.
“இது மூத்த ஊழியர்கள் மட்டுமே எதிர்கொள்ளும் எதிர்காலமாக இருக்கப்போவதில்லை; நீங்கள் இளையவராக இருந்தாலோ வாழ்க்கைத்தொழிலின் நடுத்தர நிலையில் இருந்தாலோ, ஒட்டுமொத்த ஊழியரணியும் இதை எதிர்கொள்ளும் என்றே கருதுகிறேன்,“ என்று அக்டோபர் 26ஆம் தேதி மனிதவள அமைச்சில் உள்ள அவரது அலுவலகத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, ஊழியரணிக்குத் திரும்புவோரின் விகிதம் குறைந்துள்ளதாக மனிதவளத் தற்காலிக அமைச்சர் ஜாஸ்மின் லாவ் கடந்த அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில், ஆட்குறைப்பு செய்யப்பட்ட குடியிருப்பாளர்களில் 54.9 விழுக்காட்டினர் ஆறு மாதங்களுக்குள் மீண்டும் வேலைக்குத் திரும்பினர். முதல் காலாண்டில் பதிவான 60.7 விழுக்காட்டைவிட அது குறைவு.
