வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் குத்தகையைத் திரும்ப வாங்கும் திட்டத்தின் (Lease Buyback Scheme) கீழ், வீடுகளை விற்கும் மூத்த குடிமக்கள், ‘வெர்ஸ்’ எனப்படும் (Voluntary Early Redevelopment Scheme - Vers) விருப்புரிமை அடிப்படையில் முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் மறுமேம்பாட்டுத் திட்டத்தில் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவர்.
‘வெர்ஸ்’ திட்டத்தில் வீடுகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும்போது மீதம் இருக்கும் குத்தகைக் காலம் முறையாகக் கணக்கிடப்பட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (அக்டோபர் 15) விளக்கினார்.
வீவகவின் குத்தகையைத் திரும்ப வாங்கும் திட்டத்தில் உள்ளோர் ‘வெர்ஸ்’ மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு தகுதிபெறுவார்களா என்று தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ செசியாங் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டில் குத்தகையைத் திரும்ப வாங்கும் திட்டம் அறிமுகம் ஆனது. அதன்படி 65 வயதுக்கு மேற்பட்டோர் அவர்களது ஓய்வுகால வருமானத்துக்கு உதவியாக வீவக வீடுகளின் குத்தகைக் காலத்தின் ஒரு பகுதியை விற்று, பணம் பெறுகின்றனர்.
சிங்கப்பூருக்குத் தேவையான வீடுகளைக் கட்ட, வெர்ஸ் திட்டப்படி, வீவக வீடுகளின் 99 ஆண்டு குத்தகை முடிவதற்குள் மறுமேம்பாட்டுப் பணிகளுக்காக அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். மீதம் உள்ள குத்தகைக் காலத்துக்கான இழப்பீடு அவ்வாறு ஒப்படைக்கும்போது உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.
மேலும், தேர்ந்தெடுக்கப்படும் பேட்டைகளில் உள்ள வீடுகள், 70 ஆண்டுகளுக்குமேல் எட்டியிருக்க வேண்டும். குத்தகை முடிவதற்குள் வீட்டு உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் வீடுகளை ஒப்படைப்பதில் உடன்படுகின்றனரா என்பதையும் அவர்கள் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
‘வெர்ஸ்’ திட்டம் 2030ஆம் ஆண்டுகளின் முதற்பாதியில் சில இடங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெர்ஸ் திட்டத்தின் முழு வரைவுகளை மேம்படுத்தி, செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கம் என்று முன்னதாக அமைச்சர் கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஆறு மாதங்களில் குத்தகையைத் திரும்ப வாங்கும் திட்டத்தில் 1,170 மூத்த வீட்டு உரிமையாளர்கள் இணைந்துள்ளனர் என்று திரு சீ தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தில் ஐந்து ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுதோறும் 1,680 உரிமையாளர்கள் இணைந்தனர் என்று வீவக கடந்த 2024ஆம் ஆண்டில் தெரிவித்தது. அவர்கள் $100,000 முதல் $300,000 வரை பெற்றனர் என்றும் அது தெரிவித்தது.