தேசிய தின அணிவகுப்பின் பங்கேற்பாளர்கள் பாதுகாப்பு, மருத்துவ விதிமுறைகளைப் பின்பற்றும்படி தற்காப்பு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
சனிக்கிழமை (ஜூன் 21) பங்கேற்பாளர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அமைச்சு அதை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நினைவூட்டியது.
பாடாங்கில் ஜூன் 21 நடைபெற்ற ஒத்திகையின்போது செர்டிஸ் துணைக் காவல்படை அதிகாரி மயங்கி விழுந்து மாண்டதைத் தற்காப்பு அமைச்சும் சாங்கி விமான நிலைய குழுமமும் உறுதிப்படுத்தின.
சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி, உயிரிழந்த ஆடவர் திரு முகமது அட்ஸ்ரி அப்துல் அட்ஸிஸ் என்று தமது ஃபேஸ்புக் பதிவில் அடையாளம் காட்டியுள்ளார்.
தெம்பனிஸ் குடியிருப்பாளரான திரு அட்ஸ்ரிக்குத் தமது இறுதி மரியாதையைச் செலுத்த நேரில் சென்றதைத் திரு மசகோஸ் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்புக்கான ஒன்சாங்கி அணியில் 47 வயது திரு அட்ஸ்ரி அங்கம் வகித்தார். ஒன்சாங்கி அணியில் பங்கெடுத்த ஒன்பது அணிகளில் செர்டிஸ் அணியும் ஒன்று.
உடல்நலம் சரியில்லை என்றால் ஒத்திகையில் பங்கேற்க வேண்டாம் என்று ஒத்திகைக்கு முன் பங்கேற்பாளர்களிடம் நினைவூட்டப்பட்டதாகத் தற்காப்பு அமைச்சு சொன்னது.
அதோடு தேசிய தின அணிவகுப்பில் அணிவகுத்துச் செல்லும் பங்கேற்பாளர்கள் தங்கள் சுகாதாரம் குறித்த விவரங்களைக் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“இத்தகைய விதிமுறைகள் இருந்தாலும் மருத்துவ அவசரநிலை ஏற்படக்கூடும்,” என்று அமைச்சு சுட்டியது.
பயிற்சிகளின்போது, ஒத்திகை அல்லது நிகழ்ச்சியின்போது மருத்துவ அவசரநிலையைக் கையாள மருத்துவர்கள், ஆன்புலன்ஸ் ஆகியவை அங்கேயே தயார் நிலையில் இருக்கும் என்று அமைச்சு விளக்கம் அளித்தது.
ஜூன் 21 காலை 11.23 மணிக்குச் சம்பவம் நிகழ்ந்தது. அதையடுத்து சம்பவ இடத்திலேயே திரு அட்ஸ்ரிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின் கிட்டத்தட்ட 11.40 மணிக்கு அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பிற்பகல் 12.20 மணியளவில் திரு அட்ஸ்ரி உயிரிழந்ததாகத் தற்காப்பு அமைச்சும் சாங்கி விமான நிலைய குழுமமும் கூறின.

