தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேலும் இரு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கையகப்படுத்த ஒப்பந்தம்

2 mins read
393b4751-daff-49b2-8c51-5fc0f9de77d8
ஒப்பந்த கையெழுத்துச் சடங்கில் திசென்குரூப் மரின் சிஸ்டம்ஸ் தலைமை நிர்வாகி ஆலிவர் புர்கார் (இடது), தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பின் தலைமை நிர்வாகி இங் சாட் சோன். - தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு

கூடுதலாக இரண்டு ‘இன்வின்சிபல்’ வகை நீர்மூழ்கிக் கப்பல்களைக் கையகப்படுத்த ஜெர்மனியின் ‘திசென்குரூப் மரின் சிஸ்டம்ஸ்’ நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சு வியாழக்கிழமை (மே 8) அறிவித்தது.

இதன்மூலம் சிங்கப்பூரின் நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கை ஆறாக உயரும். பயணப் பாதைகளைப் பாதுகாக்க சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் ஆற்றலை இது மேலும் மேம்படுத்தும் என்று அமைச்சு கூறியது.

இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது இந்த ஏற்பாடு குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. சிங்கப்பூர் ஆயுதப்படைக்கான வன்பொருள் புதுப்பிப்புகளுக்கு சிங்கப்பூர் திட்டமிட்டதாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் அப்போது கூறியிருந்தார்.

சிங்கப்பூர் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் எதிர்பார்த்தபடி நடந்தேறி வருவதை அப்போது சுட்டிய டாக்டர் இங், கூடுதலாக இரண்டு ‘இன்வின்சிபல்’ வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் தேவைப்படுவதாகச் சொன்னார்.

அக்கப்பல்கள் நெருக்குதலான சூழலில் இயங்குவதன் காரணமாக அவற்றுக்கு அடிக்கடி தீவிரமான பராமரிப்பு தேவைப்படுவதால் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் போதாது என்றார் அவர்.

நீண்டகால ஆற்றல் மேம்பாட்டுக்கு சிங்கப்பூர் கடற்படையின் அணுகுமுறையின் ஒரு பகுதியாக இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் அமைவதாக தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.

“சிங்கப்பூரின் தேவைகளுக்காக தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பால் தனிப்பயனாக்கப்பட்ட இன்வின்சிபல் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள்கள் மேற்பரப்பு, பரபரப்பான நீர்ப்பகுதியில் செயல்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்று அமைச்சு சொன்னது.

இந்தக் கூடுதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் 2034லிருந்து விநியோகம் செய்யப்படும். ஏற்கெனவே உள்ள நான்கு இன்வின்சிபல் வகை நீர்மூழ்கிக் கப்பல்களில் இரண்டு, 2024 செப்டம்பரில் ஆணைபெற்றவை.

இந்நிலையில் மூன்றாவது, நான்காவது நீர்மூழ்கிக் கப்பல்கள்களுக்கான சோதனையோட்டம் ஜெர்மனியில் திட்டமிட்டபடி நடந்து வருவதாக தற்காப்பு அமைச்சு கூறியது. அவை 2028க்குள் சிங்கப்பூர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்