லிட்டில் புரோஃபெசர்ஸ் லர்னிங் சென்டர் சேவைகள் நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட எட்டு தொடக்கப்பள்ளிகளில் உள்ள 1,800 மாணவர்களுக்குப் பள்ளிக்குப் பிந்தைய பராமரிப்புச் சேவைகளை வழங்க நான்கு புதிய நிறுவனங்களை கல்வி அமைச்சு நியமித்துள்ளது.
புதிய நிறுவனங்களுக்கு மாணவர்கள் மாறும் இந்த இடைப்பட்ட காலத்தில், ஏப்ரல் முதல் மே மாதம் வரையிலான இரண்டு மாதக் கட்டணத்தை அமைச்சு ஏற்கும் என்று மார்ச் 30ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சேவைகள் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் தொடங்கும்.
கிராஞ்சி, பொங்கோல் கோவ், வாட்டர்வே மற்றும் வெஸ்ட்வுட் ஆகிய நான்கு தொடக்கப்பள்ளிகளில் நாஸ்கன்ஸ் பிரைவேட் லிமிடெட் தனது சேவைகளை வழங்கும்.
ஜிங் ஷான், வைட் சேண்ட்ஸ் தொடக்கப்பள்ளிகளில் ஒய்எம்சிஏ எனப்படும் சிங்கப்பூர் இளம் ஆண்கள் கிறிஸ்தவ சங்கம் சேவைகளை வழங்கும்.
ஆங்கர் கிரீன் தொடக்கப்பள்ளியில் லர்னிங் ஸ்டூடியோ எடுயூகேர் சேவைகளை வழங்கும்.
ஹோங் வென் பள்ளியில் பிரின்ஸ்பல் அகாடமி இக்கார்ப்பரேட் சேவைகளை வழங்கும்.
இந்த அமைப்புகள், கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளைக் கொண்டுள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு பாலர் பராமரிப்புச் சேவைகளையும் வழங்கும்.
வழக்கமான பள்ளிக்குப் பிந்தைய பராமரிப்புச் சேவைகள் மீண்டும் தொடங்குவதை உறுதிசெய்ய, மாற்று நிறுவனங்களைத் தேடும் பணியை அமைச்சு விரைவுபடுத்தியது. அனுபவம் மற்றும் நல்ல பின்னணி கொண்ட 11 நிறுவனங்களின் விண்ணப்பங்களைப் பரிசீலித்த பின்னரே இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஒப்பந்த மீறல்கள் மற்றும் கட்டணக் கழிப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக பிப்ரவரி 14ஆம் தேதியன்று லிட்டில் புரோஃபெசர்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை அமைச்சு ரத்து செய்து, காவல்துறைப் புகாரையும் பதிவு செய்தது.
புதிய நிறுவனங்களின் கட்டணங்கள் மற்ற பள்ளிகளுடன் ஒப்பிடும்போது நிகராக இருந்தாலும், லிட்டில் புரோஃபசர்ஸ் வசூலித்ததைவிட சற்று அதிகமாகவே உள்ளன.
மாணவர் பராமரிப்புக்கான கட்டணம் கிராஞ்சி தொடக்கப்பள்ளியில் மட்டும் $5 குறைக்கப்பட்டு $290ஆக இருக்கும். மற்ற பள்ளிகளில் $250 முதல் $320 வரை இருக்கும். (முன்பு $234.60 முதல் $295 வரை இருந்தது).
பாலர் பராமரிப்புக்கான கட்டணம் $400 முதல் $425 வரை இருக்கும். (முன்பு $346.80 முதல் $360 வரை இருந்தது).

