தேர்வுகள் ஏற்படுத்தும் விளைவுகளை எவ்வாறு குறைப்பது என்பதை மறுபரிசீலனை செய்யும் நோக்கத்தில், தேர்வுகளின் சிரமத்தைச் சரிசெய்ய, உயர்நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கையில் தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வு (பிஎஸ்எல்இ) முடிவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஆராய்வது உள்ளிட்ட மாற்றங்களை கல்வி அமைச்சு பரிசீலித்து வருகிறது.
நேரடிப் பள்ளி சேர்க்கை மற்றும் இணைப் பாட நடவடிக்கைகள் போன்ற பிற அம்சங்களுடன் கல்வியின் உயர் போட்டித்தன்மையைக் கட்டுப்படுத்த அமைச்சு பரிசீலித்து வரும் பிரச்சினைகள் இவை என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார். இவை அதிக போட்டித்தன்மை வாய்ந்தவையாக மாறிவிட்டன என்றும் அவர் விவரித்தார்.
மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு முன்பு மக்களின் கருத்துகளைக் கேட்க அமைச்சு விரும்புகிறது. மேலும் விரைவில் சிங்கப்பூரர்களுடன் தொடர்ச்சியான உரையாடல்கள் தொடங்கப்படும் என்று திரு லீ, ஜனவரி 26ஆம் தேதியன்று ஒரு நேர்காணலின்போது தெரிவித்தார்.
மே 2025ல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு திரு லீ ஊடகங்களுக்கு அளித்த முதல் நேர்காணல் அது.
கல்வி அமைச்சு மாற்று மதிப்பீட்டு மாதிரிகளை ஆராயுமா அல்லது பிஎஸ்எல்இ தேர்வு ஒரு மைய அம்சமாகத் தொடருமா என்று கேட்டதற்கு, “நாங்கள் முன்கூட்டியே தீர்மானிக்க விரும்பவில்லை. நாம் வரம்புகளை வரையறுக்க விரும்பவில்லை. அது ஒரு மாற்றமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். அது மிகவும் பெரியதாகவும் இருக்கலாம்,” என்று அவர் பதிலளித்தார்.
“என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, கல்வி அமைச்சு ஒரு ‘வெளிப்படையான, மனந்திறந்த’ உரையாடலை நடத்த விரும்புகிறது. எந்த அணுகுமுறையை நாங்கள் கடைப்பிடிப்போம் என்று இப்போதைக்கு உறுதியாகக் கூறமுடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.
கல்வி அமைச்சின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட இந்த நேர்காணலில், கடந்த ஏழு மாதங்களில் அமைச்சின் ஊழியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேசியதாகத் திரு லீ கூறினார்.
அந்தச் சந்திப்புகள் கல்வி முறைக்கான அவரது முன்னுரிமைகளை வடிவமைத்துள்ளன. மதிப்பெண்கள், போட்டியுடன் தேசிய நிர்ணயத்தைக் குறைத்தல், சமூகக் கலவையை மேம்படுத்துதல், முழுமையான கற்றலில் மீண்டும் கவனம் செலுத்துதல் ஆகியவை அவற்றில் முக்கியமானவை.
தொடர்புடைய செய்திகள்
கல்வி அமைச்சின் பல்லாண்டு முயற்சியில் பள்ளித் தலைவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள், ஆய்வாளர்கள், பரந்த சமூகம் போன்ற பிரிவுகளுடன் உரையாடல்கள் இடம்பெறும் என்று திரு லீ விளக்கினார்.
இது, நேரில் மக்கள் பங்கேற்கும் குவிநோக்கு கலந்துரையாடல்கள், இணைய ஈடுபாடுகள் மற்றும் ஆய்வுகள் மூலம் மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்கள் பின்னர் பகிரப்படும் என்று அவர் கூறினார்.
தேர்வுகள் மற்றும் மதிப்பீடுகள் ஒரு பிள்ளையின் புரிதலை அளவிடுவதையும், இட ஒதுக்கீட்டை வழிநடத்துவதையும், அவர்களுக்கு மிகவும் பொருத்தமான கற்றல் அளவை தீர்மானிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று திரு லீ தெரிவித்தார்.
எந்தவொரு கொள்கை மாற்றங்களும் கவனமாக மேற்கொள்ளப்படும். ஏனெனில், இவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
தேர்வைச் சிரமமாக்குவது எது என்பதை அமைச்சு புரிந்துகொள்ள விரும்புவதாக திரு லீ கூறினார்.
ஒரு தலைமுறையின் மனநிலையை மாற்றுவதற்கு நேரம் எடுக்கும். விளையாட்டு, கலை, இசை, தலைமைத்துவம், சமூக சேவை போன்ற பிற அம்சங்களை ஆராய மாணவர்களுக்கு நேரமும் இடமும் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.


