தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்கும் உள்துறை அமைச்சின் ‘எச்டிஎக்ஸ்’

2 mins read
8e133ee5-9f04-4458-b2bf-752b10eb0f73
சென்ற ஆண்டு செந்தோசாவில் நடைபெற்ற செய்தியாளர்களுக்கான நிகழ்ச்சியில் எச்டிஎக்ஸ் உருவாக்கிய அதிநவீன முறைகள் எடுத்துக்காட்டப்பட்டன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெடய்ட்ஸ் டைம்ஸ்

தொழில்நுட்பத் துறையில் இவ்வாண்டு பலர் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருகின்றனர்.

அதோடு, அத்துறையில் கண்டிப்பாக அலுவலகத்துக்கு வரவேண்டும் என்ற உத்தரவு அதிகமாகப் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

‘டெக்லே‌ஷ்’ (Techlash) என்றழைக்கப்படும் தொழில்நுட்பத் துறை பின்னடைவால் உலகளவில் 100,000க்கும் அதிகமான ஊழியர்கள் இவ்வாண்டு வேலையை இழந்துள்ளனர். நிறுவன நடைமுறைகள் மறுசீரமைக்கப்படுவது, வேலை நியமனச் செலவு அதிகரிப்பது போன்ற காரணங்களால் மேலும் பலர் ஆட்குறைப்பு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில் உள்துறை அமைச்சு சீருடைப் பிரிவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு (HTX - எச்டிஎக்ஸ்) அந்தப் போக்கை மாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 1) தனது ஐந்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அந்த அமைப்பு, அதிகமானோரை வேலைக்கு எடுத்து வருகிறது, நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளைத் தொடர்கிறது.

அரசாங்க சார்பு அமைப்பான எச்டிஎக்ஸ், 1,000 ஊழியர்களுடன் 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2023ல் அந்த எண்ணிக்கை 1,700க்கு அதிகரித்தது.

உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான தேவைகள் அதிகரித்திருப்பதால் ஸ்டெம் (stem) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதப் பிரிவில் மேலும் 500 பேரை வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக எச்டிஎக்ஸ் சென்ற ஆண்டு தெரிவித்தது.

எச்டிஎக்சில் தற்போது 2,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அடுத்த மூன்றிலிருந்து ஐந்தாண்டுகளுக்குள் செயற்கை நுண்ணறிவுக்கென 500 பேரை வேலைக்கு எடுத்து அவர்களுக்குப் பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

எச்டிஎக்ஸ், உள்துறை அமைச்சு சீருடைப் பிரிவுக்குப் புத்தாக்கத் தீர்வுகளை வழங்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் சிறைச் சேவையின் போதைப்பொருள் சோதனை நடத்தக்கூடிய தானியக்க கழிவறை, குடிநுழைவு சோதனைச்சவாடியின் அங்க அடையாள சோதனை முறை உள்ளிட்ட திட்டங்களில் எச்டிஎக்ஸ் ஈடுபட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்கு உதவும் எந்திர கரப்பான்பூச்சிகளை உருவாக்குவதிலும் அந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாக எச்டிஎக்ஸ் கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அமைப்பில் செயற்கை நுண்ணறுவு சார்ந்த வேலைகளில் ஈடுபடும் 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வரும் மாதங்களில் மேலும் 100 பேரை வேலைக்கு எடுக்கவும் 2025ஆம் ஆண்டிறுதிக்குள் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் மொத்தம் 300 பேரை வேலையில் வைத்திருக்கவும் எச்டிஎக்ஸ் திட்டமிட்டுள்ளது.

அதோடு, கூடுதல் ஊழியர்களை ஈர்க்கவும் தற்போதிருக்கும் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளைத் தொடரப்போவதாக எச்டிஎக்ஸ் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்