துவாஸ் பகுதியில் உள்ள சாக்கடை வாயிற் புழை ஒன்றின் மூடியை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு ஊழியர்கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 10) நிகழ்ந்தது.
ஜாலான் புரோ, பைனியர் சாலை இடையிலான சாலைச் சந்திப்புக்கு அருகில் சாக்கடை வாயிற் புழையின் மூடியை மாற்ற அதைச் சுற்றியிருந்த சிமெண்ட்டை உடைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
தீக்காயங்களுக்கு ஆளான ‘ஹொங் ஹோக் குளோபல்’ நிறுவனத்தைச் சேர்ந்த அந்த இரு ஊழியர்களும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், மற்றொருவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.
இந்த விபத்தையடுத்து, விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, அதுபோன்ற அனைத்துப் பணிகளையும் உடனடியாக நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மனிதவள அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
மேலும், பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு முன், இடர் மதிப்பீடுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்து பலப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலத்தடி உள்கட்டமைப்புகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய வாயுக்கள் உருவாகக்கூடும் என்பதால், முதலாளிகள் விரிவான இடர் மதிப்பீடுகளைச் செய்ய வேண்டும் என்றும் ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.

