வேலையிடங்களில் சோதனைகளை அதிகரிக்கும் மனிதவள அமைச்சு

2 mins read
80c6b51c-6c7c-4159-bcf6-da43ee19f5ab
நிறுவனங்கள் பாதுகாப்பு நேர இடைவெளிவிட்டு, பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்யும்படி மனிதவள அமைச்சு ஆலோசனை தெரிவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிக அபாயமுள்ள துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் மனிதவள அமைச்சு அதிக சோதனைகளை மேற்கொள்ளவிருக்கிறது.

இவ்வாண்டு மே மாதத்தில் வேலையிடங்களில் ஐந்து பேர் உயிரிழந்ததை அடுத்து, நிறுவனங்கள் தாமாக முன்வந்து பாதுகாப்பு நேர இடைவெளி விடும்படி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2024 மே மாதத்தில் வேலையிடங்களில் மூன்று உயிரிழப்புகள் பதிவான நிலையில், இவ்வாண்டு அதே காலகட்டத்தில் உயிரிழப்பு கூடிவிட்டது.

இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை (ஜூன் 12) முதல் ஜூன் 26ஆம் தேதிவரை பாதுகாப்பு நேர இடைவெளி விடும்படி நிறுவனங்களை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த நேர இடைவெளியின்போது, குறிப்பாக வாகனங்கள், உயரமான இடத்தில் வேலை செய்வது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுவனங்கள் மறுஆய்வு செய்து, குறைபாடுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அவற்றைச் சரிசெய்யலாம்.

அத்துடன், ஜூன், ஜூலை மாதங்களில் வெப்பமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதால், அதனால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

இதனிடையே, குறிப்பாக அதிக அபாயமுடைய துறைகளைக் குறிவைத்து, தனது அமலாக்க நடவடிக்கைகளை 25 விழுக்காடு அதிகரிக்கவிருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டுமானம், உற்பத்தி, கடல்துறை, போக்குவரத்து, சேமிப்பிடம் உள்ளிட்ட துறைகள் அதிக அபாயமுள்ள துறைகளாகக் கருதப்படுகின்றன.

விதிமுறைகளை மீறும் வேலையிடங்களுக்குப் பணிநிறுத்த ஆணை பிறப்பிக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம். மேலும், வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் அவை சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரலாம்.

கடந்த 2023ஆம் ஆண்டு 36ஆகப் பதிவான வேலையிட உயிரிழப்புகளின் எண்ணிக்கை, அதற்கு அடுத்த ஆண்டில் 43ஆக உயர்ந்தது.

குறிப்புச் சொற்கள்