தெம்பனிஸ் குடியிருப்புப் பேட்டையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் வியாழக்கிழமை (ஜனவரி1) நள்ளிரவைக் கடந்து நடந்த வாணவேடிக்கையின்போது நிகழ்ச்சி நடந்த கட்டடத்தின் மேல்மாடியில் தீப்பிடித்துக்கொண்டது.
சிறிய அளவிலான தீ, ‘அவர் தெம்பனிஸ் ஹப்’ கட்டடத்தின் கூரையில் உள்ள பூங்காவின் புல்தரையில் ஏற்பட்டது.
சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட காணொளியில் அங்கு வாணவேடிக்கை தொடங்கிய சில நிமிடங்களில் தீ பற்றியுள்ளது தெரிகிறது. கீழ் மாடிகளில் பொதுமக்கள், நடப்பது என்ன என்று அறியாமல் தொடர்ந்து நடந்து செல்வதும் பதிவாகியுள்ளது.
அன்றைய தினம், நள்ளிரவுக்கு மேல் 12.05 மணிக்கு எண்1, தெம்பனிஸ் வாக் முகவரியில் தீ விபத்து நடந்துள்ள தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அந்தக் கட்டடத்தில் தெம்பனிஸ் சமூக மன்றமும் உள்ளது.
தீவின் ஏழு குடியிருப்புப் பேட்டைகளில் நடந்த புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சிகளில் அங்கு நடந்த நடவடிக்கையும் அடங்கும்.
கட்டடத்தின் உச்சியில் இருந்த புல்தரையில் ஏற்பட்ட சிறு அளவிலான தீயை தீயணைப்புப் படையினர் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் குழாயைக் கொண்டு அணைத்துவிட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று குடிமைத் தற்காப்புப் படை உறுதிசெய்தது.
தீப்பிடித்ததற்கான காரணத்தை அறிய விசாரணை தொடர்கிறது.

