தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கஞ்சா தொடர்பான இசைவுப் போக்குக்கு தவறான தகவல் காரணம்: ஜோசஃபின் டியோ

2 mins read
34becf11-6107-44be-b657-5997dfe6e6b0
சில நாடுகள் கஞ்சாவைப் பொழுதுபோக்காகப் பயன்படுத்துவது குறித்துச் சோதிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகெங்கும் போதைப்பொருள் பயன்பாடு மோசமாக இருக்கும் சூழலில் கஞ்சா குறித்த தவறான தகவல்கள் பரவுகின்றன. இளையர்களிடையே கஞ்சா குறித்த இசைவுப் போக்குக்கு இது காரணம் என்று கருத்தாய்வுகள் கூறுவதாக தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.

கஞ்சா பயன்பாட்டின் விளைவுகள் குறித்து எல்லா வகையிலும் தவறான தகவல்கள் பரவியுள்ளன. எடுத்துக்காட்டாக, கஞ்சா இயற்கையாக விளைவது. எனவே அது பாதுகாப்பானது என்றும் அது மதுபானம், புகையிலை ஆகியவற்றிலிருந்து வேறுபட்டதன்று என்றும் கூறப்படுகிறது என்றார் அமைச்சர்.

சிங்கப்பூரில் கடுமையான போதைப்பொருள் கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடப்பிலிருந்தாலும், 2015ஆம் ஆண்டு இங்கு நடந்த போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களால் $1.2 பில்லியன் செலவானதாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற போதைப்பொருளில்லா சிங்கப்பூர் செயல்வீரர்கள் கருத்தரங்கில் (DrugFreeSG Champions Conference) திருமதி டியோ உரையாற்றினார். 900க்கு மேற்பட்டோர் அதில் கலந்துகொண்டனர்.

அவரவர் சமூகங்களில் போதைப்பொருளில்லாத நிலையை ஊக்குவிக்கும் கல்வியாளர்கள், மாணவத் தலைவர்கள், ஆலோசகர்கள், இளம் ஊழியர்கள் போன்ற செயல்வீரர்களை அந்தக் கருத்தரங்கு அங்கீகரிக்கிறது.

போதைப்பொருள்கள் பற்றிய தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையாக இருக்கக்கூடாது. கஞ்சா குறித்த அறிவியல் தகவல்கள் தெளிவானவை. அது, பயன்படுத்துபவரை அடிமைப்படுத்தக்கூடியது. அதனால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்பைப் போக்கவே இயலாது,” என்றார் அமைச்சர்.

கஞ்சா பயன்படுத்துவதால் தலைவலி, குமட்டல் போன்ற உடல்நலச் சிக்கல்கள் ஏற்படும் என்று கூறிய அவர், மனநோய், மறதி, மனநிலைத் தடுமாற்றம் போன்றவையும் ஏற்படும் என்பதைச் சுட்டினார்.

இத்தகைய ஆய்வு முடிவுகள் குறித்து அறிந்திருந்தாலும், வேறு சில நாடுகள் கஞ்சாவைப் பொழுதுபோக்காகப் பயன்படுத்துவது குறித்துச் சோதிப்பது துரதிர்ஷ்டவசமானது என்றார் திருமதி டியோ.

“இது அபாயகரமானது. பொறுப்பற்றதும்கூட. ஏனெனில், அத்தகைய பரிசோதனைகள் மூலம் அந்த நாடுகளில் குடிமக்களின் உயிரோடு விளையாடுகிறார்கள். அந்தப் பரிசோதனைகள் தோல்வியடைந்துள்ளன,” என்றார் அவர்.

தாய்லாந்தைச் சுட்டிய அமைச்சர், அங்கு கஞ்சா பயன்பாடு குற்றமாகக் கருதப்படாது என்று அறிவித்த ஆறு மாதங்களில் அதற்கு அடிமையானோர் எண்ணிக்கை நான்கு மடங்கானதையும் அதிகாரிகள் மீண்டும் அதைக் குற்றம் என்று அறிவித்தும் நிலைமை மோசமாக இருப்பதையும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்