காணாமல் போன முதியவர் மீட்பு: மருத்துவமனையில் சந்தித்து அன்பளிப்பு வழங்கினார் அமைச்சர் சண்முகம்

காணாமல் போன முதியவர் மீட்பு: மருத்துவமனையில் சந்தித்து அன்பளிப்பு வழங்கினார் அமைச்சர் சண்முகம்

2 mins read
39582ac9-1664-4ed0-b7b3-f39aca8b5deb
மீட்கப்பட்ட திரு கோ காவ்வை உள்துறை அமைச்சரும் நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு கா. சண்முகம் மருத்துவமனையில் சந்தித்தார். திரு லோவின் குடும்பத்தினருக்குச் சத்துணவுப் பொருள்கள் அடங்கிய கூடை, ஒரு ஜோடி மாண்டரின் ஆரஞ்சுப் பழங்கள் மற்றும் பணமுடிப்பு ஆகியவற்றை அவர் வழங்கினார் - படங்கள்: ஃபேஸ்புக்

ஈசூனில் காணாமல் போன 82 வயது முதியவர் ஒருவர், பிப்ரவரி 6ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டார். ஐந்து நாள்கள் தேடுதலுக்குப் பிறகு அவர் மீட்கப்பட்டார்.

அவர் ஐந்து நாள்களுக்கு உணவு, தண்ணீர் இன்றி அவதியுற்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். திரு லோ காவ் செவித்திறன் மற்றும் பேசும் ஆற்றல் இல்லாதவர் என்று கூறப்படுகிறது.

நீ சூன் குடியிருப்பாளரான திரு லோ, தற்போது மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திரு லோ பாதுகாப்பாகவும் காயங்கள் இன்றி நலமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, பிப்ரவரி 3ஆம் தேதியன்று திரு லோ காணாமல் போனது குறித்த காவல்துறை வெளியிட்ட அறிவிப்பை அமைச்சர் சண்முகம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் சண்முகம், சனிக்கிழமையன்று (பிப்ரவரி 14) மருத்துவமனைக்குச் சென்று திரு லோவைச் சந்தித்தார்.

அவர் திரு லோவின் குடும்பத்தினருக்குச் சத்துணவுப் பொருள்கள் அடங்கிய கூடை, ஒரு ஜோடி மாண்டரின் ஆரஞ்சுப் பழங்கள் மற்றும் பணமுடிப்பு ஆகியவற்றை வழங்கினார்.

தமது தொகுதியில் 65 வயதிற்கும் மேற்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் தமது குழுவினர் ஏற்கெனவே சீனப் புத்தாண்டு பணமுடிப்பு வழங்கிவிட்டதாகவும் அப்போது திரு லோ அங்கு இல்லாததால் அதை இப்போது வழங்கியதாகவும் அமைச்சர் சண்முகம் விளக்கினார்.

இந்தப் பணமுடிப்பு திரு லோவுக்கு நல்லதிர்ஷ்டத்தைத் தரும் என்று அமைச்சர் சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.

அமைச்சர் சண்முகம் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு, தேடும் முயற்சிக்கு அவர் வழங்கிய ஆதரவுக்குத் திரு லோவின் குடும்பத்தார் நன்றி தெரிவித்துக்கொண்டனர். மேலும், தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் வகையில் கைப்பட எழுதிய அட்டையைத் திரு சண்முகத்திடம் அவர்கள் கொடுத்தனர்.

குறிப்புச் சொற்கள்