வேலை அனுமதி அட்டைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதன் தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஆதரவுக் குழு ஒன்று, அச்செயல் ஒரு வேலை வாய்ப்பு மோசடி என்று கூறியுள்ளது.
சிங்கப்பூரில் மூன்று மாதங்களுக்கு வேலை செய்ய, வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்களுக்கும் சிறிது காலத்துக்கு வேறு கிளைக்கு மாற்றப்படும் ஒரு நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் பயிற்சி வேலை அனுமதி அட்டைகள் (Training Employment Passes) வழங்கப்படுவதுண்டு.
இந்த வேலை அனுமதி அட்டைகள், குறைந்த திறன்கள் தேவைப்படும் வேலைகளுக்காக வெளிநாட்டு ஊழியர்களை எடுக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அத்தகைய வேலைகள், பயிற்சி வேலை அனுமதி அட்டை திட்டத்துக்கு உட்படமாட்டா.
பயிற்சி வேலை அனுமதி அட்டை திட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுப்படுவதன் தொடர்பில் ஏற்கெனவே விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் விசாரணை தொடரும் என்று மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தெரிவித்தது.
தங்களுக்கு வந்த புகார்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அமைச்சு வெளியிடவில்லை. பயிற்சி வேலை அனுமதி அட்டையைக் கொண்டு வெளிநாட்டு மாணவர்களும் ஊழியர்களும் பயிற்சி பெற ஒரு நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளைக்கு அனுப்பப்படலாம். அவர்கள் மூன்று மாதங்கள் வரை வேலைப் பயிற்சி மேற்கொள்ளலாம்.
நிபுணத்துவ, மேலாளர், நிர்வாக, சிறப்புத் திறன் வேலைப் பயிற்சிகளுக்கு இது பொருந்தும். இதன்கீழ் வேலைப் பயிற்சி பெறுபவரின் மாதச் சம்பளம் குறைந்தது 3,000 வெள்ளியாக இருக்க வேண்டும். மாணவர்கள் பயிற்சி வேலை அனுமதி அட்டைக்குத் தகுதிபெற, வேலைப் பயிற்சி அவர்களின் கல்விக்குத் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பயின்றுகொண்டிருக்க வேண்டும் அல்லது அவர்களின் மாதச் சம்பளம் குறைந்தது 3,000 வெள்ளியாக இருக்கவேண்டும்.
பயிற்சி வேலை அனுமதி அட்டையை வைத்திருக்கும் 13 பேர், வெளிநாட்டு ஊழியர்கள் சமமாக நடத்தப்படுவதை ஊக்குவிக்கும் ‘டிரான்சியென்ட் வொர்க்கர்ஸ் கவுன்ட் டூ’ (டிடபிள்யுசி2) அமைப்பிடம் கடந்த சில மாதங்களாக உதவி நாடியதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.
அந்த 13 பேர், குறைந்த திறன்கள் தேவைப்படும் பல்வேறு வேலைகளுக்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த 13 பேரில் ஐவர் உணவு, பான நிறுவனம் ஒன்றில் வேலைக்கு எடுக்கப்பட்டனர்.
மேலும் அந்து பேர் கிடங்கு ஊழியர்களாக வேலைக்கு எடுக்கப்பட்டனர்.
இருவர் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களால் வேலைக்கு எடுக்கப்பட்டனர்.
ஒருவர் சுற்றுலாப் பேருந்து நிறுவனத்தால் வேலைக்கு எடுக்கப்பட்டார்.
டிடபிள்யுசி2 அமைப்பின் இணையத்தளத்தில் சென்ற மாதம் இத்தகவல்கள் இடம்பெற்றன.