‘மொபைல் கார்டியன்’ செயலியில் ஊறு விளைவிக்கவல்ல அம்சம் இருந்தது குறித்து பொதுமக்களில் ஒருவர் புகார் அளித்த நிலையில், அது சரிசெய்யப்பட்டுவிட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மே 30ஆம் தேதி அந்தப் பாதக அம்சம் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
“அதுகுறித்து உடனடியாக விசாரிக்கப்பட்டது. ஏற்கெனவே இடம்பெற்ற பாதுகாப்புச் சோதனையின்போதே அந்தப் பாதக அம்சம் கண்டறியப்பட்டு, அது சரிசெய்யப்பட்டுவிட்டது,” என்று வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 9) அமைச்சு தெரிவித்தது.
அதனையடுத்து, தீங்கு விளைவிக்கவல்ல அந்த நிரல் இனி வேலை செய்யாது என்பதையும் அமைச்சு உறுதிசெய்தது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் திறன்கருவிப் பயன்பாட்டை நிர்வகிக்கவும், திரைநேரத்தைக் கட்டுப்படுத்தவும், குறிப்பிட்ட இணையத்தளங்கள், செயலிகளை அணுகாமல் தடுக்கவும் ‘மொபைல் கார்டியன்’ செயலி உதவுகிறது.
இணையப் பாதுகாப்புமீதான தாக்குதலால், உலகளவில் ‘மொபைல் கார்டியன்’ செயலியை நிறுவியிருந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அவர்களில், சிங்கப்பூரின் 26 உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 13,000 மாணவர்களும் அடங்குவர் என்று இம்மாதம் 5ஆம் தேதி அமைச்சு ஓர் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.
ஐபேட் அல்லது குரோம்புக் பயன்படுத்தும் மாணவர்கள் தங்கள் தரவுகளையும் செயலிகளையும் அணுக முடியாமல் போனது தொடர்பில் ஆகஸ்ட் 4ஆம் தேதி இரவு சில பள்ளிகள் மூலம் தனக்குத் தகவல் கிடைத்ததாக அமைச்சு குறிப்பிட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் திறன்கருவிகளிலிருந்த செயலிகள் வேறிடத்திலிருந்து அழிக்கப்பட்டன. இதனால், மாணவர்களின் பாடக்குறிப்புகளும் அழிந்துபோயின.
இந்நிலையில், பாதக அம்சம் குறித்த புகார் வந்ததையடுத்து, கடந்த ஜூன் மாதம் தன்னிச்சையான சான்றிதழ்பெற்ற ஊடுருவல் சோதனையாளர் மூலம் மேல்மதிப்பீடு செய்யப்பட்டது என்றும் அதில் எந்த ஒரு பாதக அம்சமும் கண்டறியப்படவில்லை என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அப்பாதக அம்சம் பற்றி புகாரளித்தவருக்கு அதுபற்றித் தெரிவித்து, அவருக்கு நன்றிகூறியதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
“எப்படியிருப்பினும், இணைய அச்சுறுத்தல்கள் மீண்டும் தலையெடுக்கலாம் என்பதாலும் புதிய பாதக அம்சங்கள் கண்டுபிடிக்கப்படலாம் என்பதாலும் கவனமாக இருக்கிறோம்,” என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சேவைகளில் காணப்படும் வலுவற்ற அம்சங்கள் குறித்து பொதுமக்கள் அதுபற்றி அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பான ‘கவ்டெக்’ (GovTech) வழியாகப் புகார் அளிக்கலாம்.

