நன்கு உறங்க கைப்பேசிகளை ஒதுக்கிவைக்கலாம்; மாணவர்களின் முயற்சி

நன்கு உறங்க கைப்பேசிகளை ஒதுக்கிவைக்கலாம்; மாணவர்களின் முயற்சி

2 mins read
fb13de8b-1ada-4ff0-9ec9-e96c0c3ba1eb
‘ஃபோன் ஸ்லீப்ஸ் ஃபர்ஸ்ட்’ திட்டத்தை உருவாக்கிய என்டியு மாணவர்கள். - படம்: ஜோய் சியூ

சிங்கப்பூரில் உள்ள ஆறு தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இளநிலை மாணவர்கள், இரவில் உறங்கவேண்டிய நேரத்தில் கைப்பேசியில் மூழ்கும் பழக்கத்தைக் கையாளும் பாடச் செயல் திட்டத்தில் (project) ஈடுபட்டனர்.

‘ஃபோன் ஸ்லீப்ஸ் ஃபர்ஸ்ட்’ எனப்படும் கைப்பேசிதான் முதலில் உறங்கவேண்டும் என்ற திட்டத்தில் 313 மாணவர்கள் ஈடுபட்டனர். இது, சம்பந்தப்பட்ட மாணவர்களின் கல்வி இறுதியாண்டு பாடச் செயல் திட்டமாகும்.

கைப்பேசிப் பயன்பாட்டுக்கும் உறக்கத்துக்கும் தொடர்பு

உறங்குவதற்கு முன்பு இடம்பெறும் கைப்பேசிப் பயன்பாட்டுக்கும் உறங்குவதற்குக் கூடுதல் நேரம் ஆவதற்கும் தொடர்பிருப்பதைப் பல்வேறு உலகளாவிய ஆய்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன. இரவில் கைப்பேசியைப் பயன்படுத்தும் இளையர்களுக்குப் போதுமான தரமான உறக்கம் கிடைப்பதில்லை என்பதையும் அந்த ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

அதோடு, அத்தகையோர் மறுநாள் சோர்வாக இருக்கக்கூடும் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) தொடர்புக் கல்வி இறுதியாண்டு மாணவர்கள் நால்வர் இத்திட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். திட்டத்தில் பங்கேற்றோர் குறைந்தது நான்கு ‘சவால் சுற்று’களில் கலந்துகொண்டனர். ஒவ்வொரு சுற்றிலும் மூன்றிலிருந்து ஏழு இரவுகளுக்கு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கருத்தாய்வுகள்

ஒவ்வொரு சுற்றுக்கு முன்பும் பின்னும் பங்பேற்பாளர்கள் கருத்தாய்வில் பங்கேற்கவேண்டியிருந்தது. உறக்கத்தின் தரம், பகலில் எவ்வளவு சோர்வாக இருக்கிறது, இரவில் உறங்கப் போவதற்கு முன்பு இடம்பெறும் கைப்பேசிப் பயன்பாடு ஆகிய அம்சங்களை அந்தக் கருத்தாய்வுகள் ஆராய்ந்தன.

இரவில் உறங்கப் போகும்போது கைப்பேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க உதவும் எளிய, நடைமுறைக்கு உகந்த வழிகாட்டிக் குறிப்புகளைப் பின்பற்றுமாறு பங்கேபற்பாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். கைப்பேசிகளைப் படுக்கையிலிருந்து தள்ளி வைப்பது, அழைப்புகளும் குறுந்தகவல்களும் வருவதைத் தெரியப்படுத்தும் ஒலி இல்லாமல் வைப்பது (do not disturb), புத்தகம் வாசிப்பது போன்ற நடவடிக்கைகள் அத்தகைய வழிகாட்டிக் குறிப்புகளில் அடங்கும்.

முடிவுகள்

பங்கேற்பாளர்கள், இரவு 10 மணியிலிருந்து காலை ஆறு மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் தங்கள் கைப்பேசியிலிருந்து ‘ஸ்கிரீன்‌ஷாட்’களையும் சமர்ப்பிக்கவேண்டியிருந்தது.

கைப்பேசிப் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு பின்னிரவில் கைப்பேசியை ‘ஸ்குரோல்’ செய்வதைக் குறைக்கும்போது மாணவர்களிடையே பகலில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் அதிகரித்தது இந்த பாடச் செயல் திட்டத்தில் தெரியவந்தது. அதோடு, மாணவர்களால் மேலும் நல்ல உறக்கப் பழக்கங்களையும் உருவாக்கிக்கொள்ள முடிவது தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்