சிங்கப்பூரும் இந்தியாவும் தங்களுக்கிடையிலான இருதரப்பு உறவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வதற்கான காலம் வந்துவிட்டது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு சொன்னார்.
கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவதாக இருப்பதாக திரு ஜெய்சங்கர் குறிப்பிட்டார். அதேவேளை, இந்தியாவிலும் உலகிலும் காணப்படும் மாற்றங்களைக் கருத்தில்கொள்ளும்போது தொடர்புகள் காலத்திற்கு ஏற்ப மாறவேண்டும் என்றும் அவர் விளக்கினார்.
அதுவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்றாவது தவணைக் காலத்தின் தொடக்கத்திலேயே சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்ததற்கான காரணம் என்று திரு ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்தியா, கடந்த பத்தாண்டுகளில் படைத்த சாதனைகளை தேசிய அளவில் வளர்ச்சியடைவது உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்துவதாகவும் திரு ஜெய்சங்கர் விவரித்தார். 1992, 2006ஆம் ஆண்டுகளில் உருவெடுத்த புதிய சூழலை சாதகமாக்கிக்கொள்ள சிங்கப்பூருக்கு வாய்ப்பு இருந்தது என்றும் அதேபோல், சிங்கப்பூர் இப்போதும் அதே அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் திரு ஜெய்சங்கர் கருத்துரைத்தார். அதற்கு இந்தியாவில் இடம்பெற்றுள்ள மாற்றங்கள் சரிவர அறியப்பட வேண்டும் என்றார் அவர்.
சில வேளைகளில் சிங்கப்பூரில் நிலவும் கருத்துகள் பழைமையானவை எனத் தாம் கருதுவதாகவும் திரு ஜெய்சங்கர் சொன்னார்.
திரு மோடியின் மனத்தில் சிங்கப்பூருக்கென என்றுமே சிறப்பான இடம் உண்டு என்றும் சுட்டிய அவர், இருதரப்புத் தலைவர்களும் தொடர்பில் இருப்பது இதுவரை இருந்ததைக் காட்டிலும் மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தற்போது இந்தியா, மத்திய கிழக்கு வட்டாரத்தில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்ரும் ஆசியானுக்கு அந்த அளவு முக்கியத்துவம் வழங்கவில்லை என்றும் கூறப்படுவது குறித்து திரு ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ஓர் அணுகுமுறையை மட்டுமே தாங்கள் எடுக்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவடைந்துள்ளது என்பதைக் குறிப்பிட்ட அவர், அது ஆசியான் தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் கூறினார்.
இன்னும் சொல்லப்போனால் இந்தியா-ஆசியான் உறவு இந்தக் காலகட்டத்தில் வலுவடைந்திருக்கிறது என்றார் அவர்.
திரு நரேந்திர மோடி, புதன்கிழமை (செப்டம்பர் 4) சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். புருணை சென்ற பிறகு அவர் சிங்கப்பூருக்கு வருகைபுரிவார்.

