இந்தோனீசியாவிலிருந்து ஜனவரி 26ஆம் தேதி சிங்கப்பூர் வந்த ஐந்து மாதப் பெண் கைக்குழந்தைக்கு தடுப்பூசி தொடர்புடைய இளம்பிள்ளை வாதம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அக்குழந்தை மருத்துவ சிகிச்சைக்காக இங்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, அதனிடம் இளம்பிள்ளை வாதம் கண்டறியப்பட்டதைச் சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) உறுதிப்படுத்தியது.
தொற்றை எதிர்த்துப் போராட அக்குழந்தையிடம் போதுமான நோயெதிர்ப்புச் சக்தி இல்லை என அமைச்சு சொன்னது.
இந்தோனீசியாவில் அக்குழந்தைக்கு இளம்பிள்ளைவாத நோய்த் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு டோஸ் வாய்வழி இளம்பிள்ளைவாத சொட்டு மருந்தும் கொடுக்கப்பட்டதுடன், ஒரு டோஸ் செயலிழந்த இளம்பிள்ளைவாத தடுப்பூசியும் அதற்குப் போடப்பட்டிருந்தது.
2024 டிசம்பரில் இந்தோனீசியாவில் இருந்தபோது அக்குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டதுடன், கால்கள் செயலிழந்தன. ஆனால், அப்போது அதனிடம் இளம்பிள்ளை வாதம் கண்டறியப்படவில்லை.
அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஜனவரி 26ஆம் தேதி அது சிங்கப்பூருக்கு அழைத்து வரப்பட்டது. இங்கு வந்திறங்கியவுடன் குழந்தை நேரடியாக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
அக்குழந்தை தற்போது சீரான உடல்நிலையில் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சு, சமூகத்தில் இளம்பிள்ளை வாதம் பரவும் சாத்தியம் குறைவாக உள்ளதாகக் கூறியது.
அக்குழந்தையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் மூவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.