சமூகப் பராமரிப்பு ஊழியர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள், தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள். துன்புறுத்தப்படுகிறார்கள். இவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாக்க புதிய வழிகாட்டி வெளியிடப்படவிருக்கிறது.
தாதிமை இல்லங்கள், அந்திமக்கால பராமரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து சமூகப் பராமரிப்பு நிலையங்களுக்கும் அந்த வழிகாட்டி விநியோகிக்கப்படும்.
வழிகாட்டி தயாரிக்கப்பட்டு வருவது குறித்த விவரங்களை மே 28ஆம் தேதி நடைபெற்ற சமூகப் பராமரிப்பு செயல்திட்ட பயிலரங்கில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் வெளியிட்டார்.
அதில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அனைத்து சமூகப் பராமரிப்பு அமைப்புகளும் அமல்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
பொதுச் சுகாதார அமைப்புகளான மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்களில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க டிசம்பர் 2023ல் தொடங்கப்பட்ட கட்டமைப்பையொட்டி இவ்வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
துன்புறுத்தல், அலைக்கழிப்பு என்பதன் வரைமுறை, அதற்கு எந்த அளவில் பதில் தருவது, துன்புறுத்துவோருக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவை கட்டமைப்பில் அடங்கியுள்ளன.
இதையடுத்து பொது சுகாதார அமைப்புகள் தங்களுடைய மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் பராமரிப்பு ஊழியர்களைப் பாதுகாக்க நெறிமுறைகளைப் புதுப்பித்துள்ளன என்று சுகாதார அமைச்சு மே 28ஆம் தேதி வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
தாதிமை இல்லங்கள், துடிப்புடன் மூப்படையும் நிலையங்கள், அந்திமக் கால நிலையங்கள், வீட்டுப் பராமரிப்பு சேவைகள் போன்ற பல்வேறு பராமரிப்பு அமைப்புகளுக்கான வழிகாட்டியை வகுக்க கடந்த ஆண்டு சுகாதார அமைச்சும் ஏஐசி எனும் ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவையும் சமூகப் பராமரிப்புத் துறைத் தலைவர்களுடன் சேர்ந்து செயல்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இந்த வழிகாட்டி, சமூகப் பராமரிப்பு ஊழியர்கள் அனுபவிக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் வசிப்பவர்களுக்கு பராமரிப்பு சேவைகளை வழங்கும் ஊழியர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகளும் இவற்றில் அடங்கும்.

