சிங்கப்பூரில் இவ்வாண்டு முற்பகுதியில் வேலையிட விபத்துகளில் 14 பேர் மாண்டனர்; மேலும் 311 பேர் பெரிய அளவில் காயமடைந்தனர்.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் வேலையிட மரண எண்ணிக்கை பாதியாகக் குறைந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது. அமைச்சு, வியாழக்கிழமை வெளியிட்ட இவ்வாண்டு முற்பகுதிக்கான தேசிய வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் புள்ளி விவரங்களுக்கான அறிக்கையில் இவ்வாறு தெரிவித்தது.
சென்ற ஆண்டு பிற்பகுதியில் வேலையிட விபத்துகளில் 18 பேர் மாண்டதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
சென்ற ஆண்டு அதிக எண்ணிக்கையில் வேலையிட மரணங்களும் விபத்துகளும் பதிவானதை அடுத்து, 2022 செப்டம்பர் மாதத்திலிருந்து இவ்வாண்டு மே மாதம் வரை வேலையிடங்களில் உயர் பாதுகாப்பு நிலையைப் பின்பற்றும்படி மனிதவள அமைச்சு உத்தரவிட்டது.
இவ்வாண்டு முற்பகுதியில் வேலையிட மரணங்கள் குறைந்ததற்கு அந்நடவடிக்கைகளே காரணம் என்று அமைச்சு குறிப்பிட்டது.
வேலையிட மரணங்கள் குறைந்திருந்தாலும் இவ்வாண்டு முற்பகுயில் வேலையிட விபத்துக்களால் மாண்ட 14 ஊழியர்களில் 13 பேர், கட்டுமானம், போக்குவரத்து, சேமிப்பு கிடங்கு போன்ற துறைகளில் வேலை செய்தவர்கள் என அமைச்சு சுட்டிக்காட்டியது.
குறிப்பாக, கட்டுமானத் துறையில் ஏற்பட்ட விபத்துகளில் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையானோர் உயரமான இடத்தில் வேலை பார்க்கும்போது விழுந்ததாலோ சாரம் சரிந்து விழுந்ததாலோ சாதனங்கள் விழுந்ததாலோ உயிரிழந்தவர்கள்.
அதனால், இதுபோன்ற சிறிய அளவிலான கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்களுடனும் நிறுவனங்களுடனும் இணைந்து பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தவிருப்பதாக அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
உற்பத்தித் துறையில் மரணம் அல்லது பெரிய அளவிலான காயம் ஏற்படுத்திய விபத்துகளில் 43 விழுக்காடு, உலோக வேலைப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்தவை. ஆண்டு முற்பாதியில் இப்பிரிவில் வேலையிட மரணம் அல்லது பெரிய அளவில் காயம் ஏற்படுத்திய 38 சம்பவங்கள் பதிவாயின
எனவே அந்தப் பிரிவிற்கு விபத்துகள் தொடர்பில் குற்றப் புள்ளிகள் வழங்கும் நடைமுறையை அக்டோபர் 1ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப் போவதாக அது தெரிவித்தது. ஏற்கெனவே அந்த நடைமுறை கட்டுமானத் துறையில் நடப்பில் இருக்கிறது.

