பேங்க் ஆஃப் சைனாவின் சிங்கப்பூர்க் கிளை, முதன்மை முகவராய்ச் செயல்படுவதற்குச் சிங்கப்பூர் நாணய ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆணையத்திடமிருந்து அத்தகைய அங்கீகாரத்தைப் பெறும் முதல் சீன வங்கி அதுவே என்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) வெளியிடப்பட்ட அறிக்கை குறிப்பிட்டது.
சிங்கப்பூர் அரசாங்கப் பத்திரங்களுக்கும் ஆணையத்தால் வெளியிடப்படும் பத்திரங்களுக்குமான சிறப்பு இடைத்தரகர்களாகச் செயல்படுவதற்கு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளே முதன்மை முகவர்கள் என்று வழங்கப்படுகின்றன. சந்தையை உருவாக்குவதும் ஏலங்களை ஏற்றுநடத்துவதும் இவற்றின் முக்கியப் பொறுப்புகள்.
சிங்கப்பூரின் நிதிச் சந்தையிலும் மூலதனச் சந்தை வளர்ச்சியிலும் வங்கியின் கூடுதல் பங்களிப்பிற்கு இந்த அங்கீகாரம் முக்கியப் படிக்கல் என்று பேங்க் ஆஃப் சைனாவின் அறிக்கை தெரிவித்தது.
முதன்மை முகவர் என்ற முறையில், தனது நிதிச் சேவை ஆற்றல்களைத் தொடர்ந்து வலுப்படுத்தப்போவதாகச் சீன வங்கி கூறியது. அத்துடன் சீனா, சிங்கப்பூர், உலகளாவிய சந்தைகளுக்கு இடையில் மூலதனச் சந்தைப் பிணைப்பை மேலும் பலப்படுத்தப்போவதாகவும் அது குறிப்பிட்டது.
பேங்க் ஆஃப் சைனா வங்கி சிங்கப்பூரில் 90 ஆண்டுகளாக இயங்கிவருகிறது.
சிங்கப்பூரில் நேரடிப் பத்திர வர்த்தகத்தின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவின் பத்திரச் சந்தையை அணுகுவதற்கான புதிய வழியை நிறுவுவது போன்ற பல்வேறு எல்லை தாண்டிய முயற்சிகளில் அது ஈடுபட்டுள்ளது.
சென்ற ஆண்டு நடைபெற்ற 21வது இருதரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஆறு நிதியியல் ஒத்துழைப்பு முயற்சிகளில் இதுவும் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.

