தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்னிலக்க நாணய கள்ளப்பண விவகாரம்: 49 பேர் மீது விசாரணை

2 mins read
7575a34c-b931-46d9-8f67-42f399b21fe3
மின்னிலக்க நாணயம். - பிக்சாபே

மின்னிலக்க நாணயக் கணக்குகள் தொடர்பில் கள்ளப்பணத்தை நல்லப்பணமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 49 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

சந்தேக நபர்களில் 35 பேர் ஆண்கள், 14 பேர் பெண்கள் என்று காவல்துறை வியாழக்கிழமை (ஜூன் 12) தெரிவித்தது. அவர்கள் 18லிருந்து 58 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் காவல்துறை குறிப்பிட்டது.

கடந்த மே மாதம் 13லிருந்து 30ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் காவல்துறையின் மோசடித் தடுப்பு தளபத்தியம் தீவு முழுவதும் மேற்கொண்ட முறியடிப்பு நடவடிக்கையில் சந்தேக நபர்கள் பிடிபட்டனர். ஸ்ட்ரெய்ட்ஸ்எக்ஸ் (StraitsX) எனும் மின்னிலக்கக் கட்டண நிறுவனத்துடன் இணைந்து தளபத்தியம் இணைந்து செயல்பட்டது.

200,000 வெள்ளிக்கும் அதிகமான தொகை பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேக நபர்கள் மின்னிலக்க நாணயக் கணக்குகளைத் திறந்து அவற்றையோ தங்களின் சிங்பாஸ் விவரங்களையோ பிறரிடம் விட்டுக்கொடுத்து பணம் பெற்றதாக நம்பப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் இத்தகவல்கள் தெரியவந்தன.

அவ்வாறு சந்தேக நபர்கள் ஒவ்வொருவருக்கும் 400லிருந்து 3,000 வெள்ளி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. டெலிகிராம், வாட்ஸ்அப் போன்ற குருந்தகவல் செயலிகள் மூலம் அடையாளம் தெரியாதோர் சந்தேக நபர்களைத் தொடர்புகொண்டு குற்ற நடவடிக்கைகளில் அவர்களை வழிநடத்தியதாகக் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட தனிப்பட்ட தகவல்கள், மின்னிலக்க நாணய அல்லது சிங்பாஸ் கணக்குகளைப் பயன்படுத்துவதற்கான விவரங்கள் போன்றவை குருந்தகவல் செயலிகள் மூலம் சந்தேக நபர்களுக்கு அனுப்பப்பட்டதாக நம்பப்படுகிறது. மோசடிச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட தொகையை அத்தகவல்களைக் கொண்டு நல்லப்பணமாக மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஸ்ட்ரெய்ட்ஸ்எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டது, சந்தேகம் தரும் நிதி நடவடிக்கைகளை அடையாளம் காண உதவியதாகக் காவல்துறை தெரிவித்தது. அதன் தொடர்பில் தங்கள் ஆற்றல் மேம்பட்டதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

அதனைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கள்ளப்பணத்தை நல்லப்பணமாக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்