நிராகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கும் பணம் கழிக்கப்பட்டது: தொகையைத் திருப்பிக் கொடுக்கும் பணியில் யூடிரிப்

நிராகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கும் பணம் கழிக்கப்பட்டது: தொகையைத் திருப்பிக் கொடுக்கும் பணியில் யூடிரிப்

2 mins read
b04af989-2673-4d39-89c1-801b8bb03475
தவறாகக் கழிக்கப்பட்ட தொகையைத் திருப்பி அளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகப் பல பணப் பரிமாற்ற மின் பணப்பை நிறுவனமான யூடிரிப் புதன்கிழமையன்று (பிப்ரவரி 25) தெரிவித்துள்ளது. - படம்: சாவ்பாவ்

தனது தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாடிக்கையாளர்களின் நிராகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கும் தவறாகப் பணம் கழிக்கப்பட்டதாகவும் அந்தத் தொகையைத் திருப்பி அளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பல பணப் பரிமாற்ற மின் பணப்பை நிறுவனமான யூடிரிப் புதன்கிழமையன்று (பிப்ரவரி 25) தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று சில பயனர்களின் அட்டைப் பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்பட்டதைச் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட அந்த நிறுவனம் கூறியது. ஆனால், பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்ட போதிலும், தங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டுள்ளதாகப் பயனர்கள் பலர் இணையம் மூலம் புகார் அளித்தனர்.

செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) இரவு 9 மணியளவில் இந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டு, அனைத்துச் சேவைகளும் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக யூடிரிப் நிறுவனம் கூறியது.

“பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டபோதிலும், பணம் கழிக்கப்பட்ட அல்லது பரிவர்த்தனை நிலுவையில் உள்ள பயனர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம்,” என்று நிறுவனம் தெரிவித்தது.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எத்தனை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர் என்பதை நிறுவனம் துல்லியமாகக் குறிப்பிடவில்லை. பாதிக்கப்பட்ட பயனர் ஒருவர் சிஎன்ஏ செய்தி நிறுவனத்திடம் பேசினார்.

செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) பிற்பகல் ஜப்பானிய அதிவிரைவு ரயில் பயணச் சீட்டை வாங்க முயன்றபோது பலமுறை பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டதாகக் கூறினார்.

“யூடிரிப் அட்டையைப் பயன்படுத்தி பயணச்சீட்டை வாங்க பலமுறை முயற்சி செய்தும் பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்பட்டன. வணிகர் தரப்பிலிருந்து உறுதிப்படுத்தல் வராததால், இறுதியில் வேறோர் அட்டையைப் பயன்படுத்தினேன். அது உடனடியாக வேலை செய்தது. ஆனால், புதன்கிழமையன்று (பிப்ரவரி 26) யூடிரிப் கணக்கைச் சரிபார்த்தபோது, நிராகரிக்கப்பட்ட அந்த ஏழு பரிவர்த்தனைகளுக்கும் சேர்த்து மொத்தம் S$1,600 கழிக்கப்பட்டிருந்தது,” என்று ரேமண்ட் என்றழைக்கப்படும் அந்தப் பயனர் தெரிவித்தார். இதனால் அவரது கணக்கில் உள்ள ஜப்பானிய யென் இருப்புத் தொகை பற்றாக்குறை அளவிற்குச் சென்றுள்ளது.

யூடிரிப் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் 20க்கும் மேற்பட்டோர் இதே போன்ற புகார்களைச் செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைத்துப் பரிவர்த்தனைகளையும் ரத்து செய்து, அந்தத் தொகையை விரைவில் வாடிக்கையாளர்களின் மின்பணப்பையில் மீண்டும் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக யூடிரிப் உறுதி அளித்துள்ளது.

“எங்கள் பயனர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறோம். ஒவ்வொரு பயனரின் கணக்கிலும் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் பணி முடிந்தவுடன், எங்களது வாடிக்கையாளர் சேவைக் குழு அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கும்,” என்று நிறுவனம் கூறியது. இது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்