மண்டாயிலிருந்து தப்பிய குரங்கு சுவா சூ காங்கில் பிடிபட்டது

1 mins read
ஆறு மாதங்களுக்குப்பின் மீண்டும் விலங்குத் தோட்டத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது
3d123770-3efd-4ebb-86d6-92f7f42d5e2e
ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அந்தக் கறுப்பு-வெள்ளைக் கொலபஸ் குரங்கு, இயூ டீ வட்டார விளையாட்டுத் திடலுக்கு அருகே ஒரு மரத்தின்மீது காணப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 5

மண்டாயில் உள்ள விலங்குத் தோட்டத்திலிருந்து தப்பிச் சென்ற ஆப்பிரிக்கக் குரங்கு ஒன்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ( நவம்பர் 1) சுவா சூ காங் பகுதியில் பிடிபட்டுள்ளது.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அந்தக் கறுப்பு-வெள்ளைக் கொலபஸ் குரங்கின் வயது 14. ‘மைக்கெல்’ (Mykel) என்பது அதன் பெயர்.

பிற்பகல் 1.30 மணியளவில் குரங்கைப் பிடிப்பதற்கான பாரந்தூக்கி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 20 நிமிடங்களில் ‘மைக்கெல்’ பாதுகாப்பான முறையில் பிடிக்கப்பட்டது.

அது விலங்குத் தோட்டத்திற்கு மீண்டும் கொண்டுசெல்லப்பட்டதாக மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் பேச்சாளர் கூறினார்.

குரங்கு எவ்வாறு முதலில் தப்பித்தது என்பது குறித்துக் குழுமம் விசாரணை நடத்திவருவதாக அவர் சொன்னார்.

முன்னதாக வியாழக்கிழமை ‘மைக்கெல்’ உட்லண்ட்ஸ் ரோட்டில் காணப்பட்டதாகப் பொதுமக்களில் ஒருவர் தகவல் தந்ததாக ‘ஏக்கர்ஸ்’ எனப்படும் விலங்குநல ஆய்வு மற்றும் கல்வி அமைப்பு (Acres) கூறியது.

கறுப்பு-வெள்ளைக் கொலபஸ் குரங்குகளுக்குத் தோளிலிருந்து பின்பக்கம் முழுவதும் ஓர் அங்கியைப் போர்த்தியதுபோல் நீண்ட வெள்ளை முடி காணப்படும்.

‘மைக்கெல்’ ஆறு மாதங்களுக்குமுன் தன் கூட்டத்தைப் பிரிந்து தப்பிச் சென்றபோது அதன் எடை 11 கிலோகிராம். பிடிபட்டபோது அது ஆரோக்கியமாகக் காணப்பட்டதாகக் கூறிய மண்டாய் வனவிலங்குக் குழுமம், விலங்குத் தோட்டத்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட பிறகு அதற்கு உடல்நலச் சோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறியது.

குறிப்புச் சொற்கள்