தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெம்பனிசில் பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட வாடகை கார்கள்

2 mins read
188fcec7-7c6d-44f4-bd66-cd098a10eb2c
பிப்ரவரி 21ஆம் தேதி வரை தெம்பனிசில் உள்ள கார்ப்பேட்டையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெம்பனிஸ் ஸ்திரீட் 92ல் உள்ள பல அடுக்கு கார்ப் பேட்டையில் 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைட்ஸ் பிரிமியர் மின்சார வாடகைக் கார்கள் பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

கார்களின் மீது படிந்துள்ள தூசி, சிறிது காலமாக அவை அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

இவை, சிங்கப்பூரின் மின்சார டாக்சிகளில் ஐந்தில் ஒரு விழுக்காடாகும்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளேடு சில டாக்சிகளை சோதனையிட்டதில் கார்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, தகுந்த சாலை வரியும் பெறப்பட்டிருந்தன.

கடந்த பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் அங்கு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை முதல் முறையாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டுபிடித்தது.

அதே மாதத்தில் மூன்று முறை செய்தியாளர்கள் அங்கு சென்றபோது கார்கள் தொடர்ந்து அங்கு இருந்தன. கடைசியாக பிப்ரவரி 28ஆம் தேதி சென்றபோதும் கார்கள் அப்படியே கிடந்தன.

இது குறித்து விவரமறிய முயற்சி செய்தபோது ஸ்ட்ரைட்ஸ் பிரிமியர் நிறுவனத்திடமிருந்து பதிலில்லை. அந்நிறுவனம் எத்தனை மின்சாரக் கார்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதும் தெரியவில்லை.

சிங்கப்பூரில் ஜனவரி 31ஆம் தேதி நிலவரப்படி 502 மின்சாரக் கார்கள் பதிவு செய்யப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதன் இணையப் பக்கத்தில் இடம்பெற்றுள்ள தகவலின்படி ஸ்ட்ரைட்ஸ் பிரிமியர் ஆறு வடிவிலான டாக்சிகளை பயன்படுத்துகிறது. மின்சார எம்ஜி5 கார்களைத் தவிர பெட்ரோல்-மின்சார கார்களான ஹுயுண்டாய், கியா, டயோட்டா ஆகியவற்றை அந்நிறுவனம் பயன்படுத்துகிறது.

2021 ஆகஸ்டிலிருந்து எம்ஜி5 மின்சாரக்காரை ஓட்டி வரும் சார்லஸ் பான் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

ஆனால் மின்சாரக் காருக்கு வேலை நேரம் மாறும்போது நடுவில் மின்னூட்டம் செய்ய வேண்டும். இது, சில ஓட்டுநர்களுக்கு ஏற்புடையதாக இருக்காது என்றார் அவர்.

டாக்சி ஓட்டுநர்கள் பசி எடுக்கும் வரை ஓட்டி பின்னர் ஓய்வு எடுப்பார்கள். ஆனால் மின்சார கார்களுக்கு “பசியெடுத்தால்” மின்னூட்டுவதற்கு இடையில் நிறுத்த வேண்டியுள்ளது என்று அவர் மேலும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்