சிங்கப்பூர், அமெரிக்க ராணுவப் படையினர் நகர்ப்புறப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
12 நாள்கள் நீடித்த அந்தப் பயிற்சியில் இருதரப்பில் இருந்தும் 1,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையைச் சேர்ந்த அப்பாச்சி ஹெலிகாட்பர்களும் வானூர்திகளும் அந்தப் பயிற்சிக்கு உதவிபுரிந்தன.
சிங்கப்பூரும் அமெரிக்காவும் சேர்ந்து நடத்திய மிக நீண்ட போர்ப் பயிற்சி இது.
‘டைகர் பாம்’ என்ற பெயரில் இம்முறை சிங்கப்பூர் பொறுப்பேற்று அந்தப் பயிற்சியை நடத்தியது.
அந்தக் கூட்டுப் பயிற்சி தொடர்பாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு வெள்ளிக்கிழமை (மே 16) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த 823 வீரர்களும் அமெரிக்க ராணுவப் படையிலிருந்து 257 வீரர்களும் போர்ப் பயிற்சியில் பங்கேற்றதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்கள் 6வது சிங்கப்பூர் பிரிவு/தலைமையகப் பிரிவையும் 76வது சிங்கப்பூர் காலாட்படையையும் சேர்ந்தவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல, அமெரிக்கப் படை வீரர்கள் ஹவாயி ராணுவ தேசியப் பாதுகாப்பு மற்றும் 29வது காலாட்படை போர்க்குழுவில் இருந்து வந்திருந்ததாகவும் அறிக்கை தெரிவித்தது.
மே 5ஆம் தேதி தொடங்கிய பயிற்சி ஏறத்தாழ இரு வாரங்களுக்கு நீடித்த பின்னர் வெள்ளிக்கிழமை (மே 16) முடிவுற்றது.
சண்டைப் பயிற்சிகளிலும் இதர பயிற்சிகளிலும் இரு நாட்டின் படைவீரர்களும் பங்கேற்றனர். ‘சாஃப்டி சிட்டி’யில் நடைபெற்ற நகர்ப்புற போர்ப் பயிற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
‘சாஃப்டி சிட்டி’ என்பது உயர் தொழில்நுட்ப அடிப்படையிலான நகர்ப்புறப் பயிற்சிக்கூடம் ஆகும்.
மக்கள் நெருக்கம் மிகுந்த நகரைப் போலவும் எம்ஆர்டி நிலையங்களைப் போலவும் அங்கு கற்பனைக் கட்டடங்கள் உள்ளன. 12 மாடி ஹோட்டல், ஒரு பள்ளிக்கூடம் மற்றும் கடைத்தொகுதிகளின் மாதிரி வடிவங்களும் பயிற்சிக்காக அங்கு நிறுவப்பட்டுள்ளன.
டைகர் பாம் ராணுவப் பயிற்சி முதன்முதலில் 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது அது 44 ஆண்டைத் தொட்டுள்ளது.