‘எஸ்ஜி’ பங்காளித்துவ நிதிக்கு 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

‘எஸ்ஜி’ பங்காளித்துவ நிதிக்கு 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

3 mins read
4f7e4812-cf8e-4b66-b37b-72240d6796b5
ஜூலை 4ஆம் தேதியன்று, காமன் கிரவுண்ட் சிவிக் சென்டரில் நடைபெற்ற சிங்கப்பூர் அரசாங்கப் பங்காளித்துவ அலுவலகத்தின் தொடக்க சமூகப் பரிமாற்ற நிகழ்வில், கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் (சிவப்பு நிற ஆடை) பங்கேற்பாளர்களுடன் உரையாடுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குடிமக்கள் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அவற்றை அவர்களுடன் இணைந்து உருவாக்குவதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் தெரிவித்தார்.

சமூக வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் குடிமக்கள் முன்னெடுக்கும் சமூகம் சார்ந்த திட்டங்களுக்கு ஆதரவளிக்க ‘எஸ்ஜி’ பங்காளித்துவ நிதி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று சிங்கப்பூர் அரசாங்கப் பங்காளித்துவ அலுவலகம் சனிக்கிழமை (ஜூலை 4) தெரிவித்தது.

திட்டங்களுக்குப் பொருளாதார ரீதியாக உதவும் அதேநேரம் ஆரம்பநிலை நிறுவனர்களுக்குத் தங்கள் சமூக முன்னெடுப்புகளைத் தொடர்வதற்குத் தகுந்த வழிகாட்டுதலையும் ஆதரவையும் ‘எஸ்ஜி’ பங்காளித்துவ நிதி வழங்கும்.

சமூகத்திற்குப் பயனளிக்கும் சமூகக் கூட்டு முயற்சிகளுக்கு நிதியளிக்க ஏறத்தாழ $50 மில்லியன் ஒதுக்கப்படும் என்று இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.

பங்காளித்துவ அலுவலகத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை காலை ‘காமன் கிரவுண்ட் சிவிக் சென்டர் & கன்சல்டன்சி’ வளாகத்தில் நடைபெற்ற சமூகப் பரிமாற்ற நிகழ்ச்சியில் ‘எஸ்ஜி’ பங்காளித்துவ நிதிக்கான விண்ணப்பங்கள் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங், சமூக மேம்பாட்டுக்கான தனது அணுகுமுறையை அரசாங்கம் திட்டமிட்டு மாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

“பாரம்பரியப் பொதுக் கலந்தாலோசனைகளிலிருந்து விலகி, குடிமக்கள் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் திட்டங்களை அவர்களுடன் இணைந்து உருவாக்குவதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது,” என்றார் அவர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

‘எஸ்ஜி’ பங்காளித்துவ நிதி மூன்று பிரிவுகளில் செயல்படும்.

புதிய சமூக முயற்சிகளைத் தொடங்குவதற்கான ‘விதை’ (seed) எனும் பிரிவின்கீழ் $5,000 வரை நிதி ஆதரவு வழங்கப்படும்.

தற்போதுள்ள திட்டங்களை விரிவுபடுத்த ‘விருட்சம்’ (sprout) எனும் பிரிவின்கீழ் $50,000 வரை நிதி ஆதரவு வழங்கப்படும்.

அத்துடன், துறை சார்ந்த பெரிய அளவிலான தாக்கங்களை ஏற்படுத்த விரும்பும் நிறுவப்பட்ட அமைப்புகளுக்காக ‘விழுது’ (scale) எனும் புதியதொரு பிரிவின்கீழ் $1 மில்லியன் வரை வழங்கப்படும்.

இந்த முயற்சியின்வழி சமூக முன்னெடுப்புக்குத் தொடர்புடைய நிறுவனர்களுக்கும் குடிமக்களுக்கும் இடையே பங்காளித்துவ அலுவலகம் ஒரு பாலமாகச் செயல்படுகிறது என்றார் துணை இயக்குநர் ஜீவராஜ் சுப்பையா, 40.

“திட்டங்களைத் தொடங்க உதவுவதோடு மட்டுமல்லாமல் தேவைப்படும் இடங்களில் தொடர்ந்து கண்காணித்து ஆதரவளிக்கிறோம்,” என்றார் அவர்.

தற்போது ‘எஸ்ஜி’ பங்காளித்துவ நிதியின்கீழ் உதவி பெற்று வருகிறது ‘புராஜெக்ட் ஜாலான் ஜாலான்’ (Project Jalan Jalan) திட்டம்.

முழுக்க முழுக்க இளையர்களால் 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், இசையின் மூலம் சிங்கப்பூரர்களிடையே அதிக இணைப்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் சமூக அக்கறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார் திட்டக் குழுவைச் சேர்ந்த கிரிஷ் பாட்டியா, 17.

இளையர்கள் வழிநடத்தும் திட்டங்களுக்கு நிதி ஆதரவு மிகப்பெரிய சவால் என்றார் கிரிஷ்.

“அந்த ஒரு காரணத்தினாலேயே நாம் பின்தங்கிவிடாமல் இருப்பதை இதுபோன்ற முயற்சிகள் உறுதிசெய்கின்றன,” என்றார் அவர்.

‘எஸ்ஜி’ பங்காளித்துவ நிதி குறித்த கூடுதல் தகவல்களுக்கு www.sgpo.gov.sg/sgpf என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்