வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) இந்த ஆண்டு ஏறக்குறைய 19,600 ‘பிடிஓ’ வீடுகளை விற்பனைக்கு விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமிப் பரவலால் வீடமைப்பில் ஏற்பட்ட இடையூறுகளைச் சமாளிக்க அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சியின் ஓர் அங்கமாக இது அமைகிறது.
2025 முதல் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 50,000க்கும் மேற்பட்ட வீடுகளைக் கழகம் விற்பனைக்கு விடும் என்று கூறப்பட்டது.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, ஜனவரி 13ஆம் தேதி அளித்த ஊடக நேர்காணலில் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
இந்தத் தகவல்களின் அடிப்படையில், 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 102,300 புதிய வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டதாகப் பொருள் கொள்ளலாம். முன்னதாகக் கழகம் இந்தக் காலகட்டத்தில் 100,000 வீடுகளை விற்பனைக்கு விடவேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது.
கிருமிப் பரவல் காலத்தில் கட்டுமானம் நிறுத்தப்பட்டதால் சில ‘பிடிஓ’ திட்டங்கள் 12 மாதங்கள் வரை தாமதமாயின.
அவற்றில் கடைசித் திட்டத்தில், இன்னும் சில வாரங்களில் வீட்டு உரிமையாளர்களிடம் சாவிகள் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சர் லீ கூறினார்.
“எல்லாவற்றுக்கும் முழுமையாகத் தீர்வு கண்டுவிட்டோம் என்று கூற முடியாது. இருப்பினும் சில ஆண்டுகளில், கிருமிப் பரவலால் வீட்டுக் கட்டுமானம் தாமதமான விவகாரம் மட்டுமின்றி முதல் முறை விண்ணப்பம் செய்வோரின் தேவையை ஈடுகட்டுவது தொடர்பாகவும் தீர்வு கண்டுள்ளோம் என்று கூறலாம்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஆண்டு விற்பனைக்கு விடப்படும் வீடுகளில் 3,800 வீடுகளுக்குக் காத்திருப்பு நேரம் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவு. சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கிட்டத்தட்ட 19, 600 வீடுகள் விற்பனைக்கு விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரியில் 5,000 ‘பிடிஓ’ வீடுகளும் விற்பனையில் எஞ்சிய 5,500 வீடுகளும் விற்பனைக்கு விடப்படும்.
2027ஆம் ஆண்டுக்குப் பிறகு வீட்டுக்கான தேவையை மதிப்பிட்டு, அதற்கேற்ப விற்பனைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கையை அரசாங்கம் முடிவு செய்யும் என்றார் திரு லீ.
‘பிடிஓ’ வீடுகளுக்கான தேவை நிலைபெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டு, முதல் முறை வீட்டுக்கு விண்ணப்பிப்போரின் விகிதம், ஒரு வீட்டுக்கு 2.1 பேர் என்று பதிவாகியிருந்தது.
முதிர்ச்சியடையாத பேட்டைகளில் மட்டுமே ஒற்றையர் ‘பிடிஓ’ வீடுகளை வாங்கலாம் என விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு கடந்த அக்டோபரில் தளர்த்தப்பட்டதை அடுத்து அத்தகையோரிடமிருந்து அதிகமான விண்ணப்பங்கள் பெறப்படுவதாக அமைச்சர் லீ கூறினார்.
இந்த ஆண்டிலிருந்து ஒற்றையர், மூத்தோர் ஆகிய பிரிவினரின் தேவையை ஈடுகட்டும் விதமாகக் கூடுதலான ஈரறை ஃபிளெக்சி வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்றார் அவர். பிப்ரவரியில் விற்பனைக்கு வரும் 5,000 வீடுகளில் 25 விழுக்காட்டு வீடுகள் இத்தகையவை என்றார் திரு லீ.
முதல் முறை வீடு வாங்குவோரில் 18 அல்லது அதற்குக் குறைவான வயதுடைய சிங்கப்பூரர்களான பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தினர்க்கும் 40 அல்லது அதற்குக் குறைவான வயதுடைய தம்பதியர்க்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்தப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்காகக் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டு வீடுகள் ஒதுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.