‘வெறுக்கத்தக்க’ படங்களுடன் கடிதங்கள் பெற்றவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்

‘வெறுக்கத்தக்க’ படங்களுடன் கடிதங்கள் பெற்றவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்

1 mins read
dccd035e-96c7-4b35-8018-e66cc52cd98b
கடிதங்கள் பாதிக்கப்பட்டோரின் வேலையிடங்களுக்கும் அனுப்பப்பட்டன. - படம்: பிக்சாபே

சிங்கப்பூரில் பொய்யான படங்களைக் கொண்ட கடிதங்களைப் பெற்றவர்களில் சில அரசியல்வாதிகளும் அடங்குவர். அவர்களை மிரட்டிப் பணமும் கேட்கப்பட்டது.

டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், டாக்டர் டான் வூ மெங், திரு எட்வர்ட் சியா ஆகியோர் ஏப்ரல் 20ஆம் தேதியன்று சமூக ஊடகத் தளங்களில் அது குறித்து பதிவுசெய்தனர். காவல்துறையில் புகார் செய்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் 70க்கும் மேற்பட்டோர் தங்களை ஆபாசமாகக் காட்டும் பொய்யான புகைப்படங்களைக் கொண்ட கடிதங்களைப் பெற்றனர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. அவர்களை மிரட்டிப் பணமும் கேட்கப்பட்டது.

அந்தக் கடிதங்கள் பாதிக்கப்பட்டோரின் வேலையிடங்களுக்கும் அனுப்பப்பட்டன. குறிப்பிடப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை அவர்கள் தொடர்புகொள்ளாவிட்டால், அவர்கள் கடும் விளைவுகளைச் சந்திக்கவேண்டி இருக்கும் என்று அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்ததாக காவல்துறை கூறியது.

செயற்கை நுண்ணறிவுக் கருவிகளில் உள்ள மேம்பாடுகளால், அந்தப் படங்களும் காணொளிகளும் மாற்றி அமைக்கப்பட்டு, பணம் கேட்பதற்காகப் பயன்படுத்தப்படலாம் என்று காவல்துறை கூறியது.

ஹோலண்ட் - புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் விவியன், இந்தச் செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதவை என்றும், நமது சமுதாயத்தில் நாம் கடைப்பிடிக்க முயலும் விழுமியங்களுக்கும் நல்ல நடைமுறைகளுக்கும் முற்றிலும் மாறானவை என்றும் கூறினார்.

அத்தகைய போலியான படங்களைப் பெறுவோர் நிதானமாக இருக்கவேண்டும் என்றும், பணம் அனுப்புமாறு விடுக்கப்படும் உத்தரவுகளைப் புறக்கணித்து, உடனடியாகப் புகார் செய்யவேண்டும் என்றும் காவல்துறை ஆலோசனை வழங்கியது.

குறிப்புச் சொற்கள்