அனைத்துலக விதிகள் மீதான தாக்கத்தில் கவனம் தேவை: சான் சுன் சிங்

அனைத்துலக விதிகள் மீதான தாக்கத்தில் கவனம் தேவை: சான் சுன் சிங்

2 mins read
e74768bc-9c0a-4e6f-84ce-b4661136b187
தேசிய பல்கலைக்கழக மத்திய கிழக்குக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

மத்திய கிழக்கு மோதலின் காரணமாக நாம் பின்பற்றும் அனைத்துலக விதிகள்மீது ஏற்படும் தாக்கத்தை அதிக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் கடல்சார் சட்ட உடன்படிக்கையை மதிப்பதும் அதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் கடல்சார் சட்ட உடன்படிக்கை என்பது ஹோர்முஸ் நீரிணை உட்பட அனைத்துலக கடல் மற்றும் கடற்படை நடவடிக்கைகளுக்கான விரிவான சட்டக் கட்டமைப்பை நிறுவும் ஒப்பந்தமாகும்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்கள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியதை அடுத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கான முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது.

முதற்கட்ட உடன்படிக்கையின்கீழ் அந்நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டது. இருப்பினும், லெபனான்மீது நடந்த தாக்குதல்களின் காரணமாக, சனிக்கிழமை (ஜூன் 20) அந்த நீர்வழியை மீண்டும் மூடுவதாக ஈரான் தெரிவித்தது.

கடல்வழிப் பாதைகளைத் திறந்து வைத்திருப்பது அனைத்துலகச் சட்டங்களைக் கொள்கை ரீதியாகப் பின்பற்றுவது மட்டுமன்று என்பதைத் திரு சான் சுட்டிக்காட்டினார்.

“அந்தப் பாதைகள் வணிகம், எரிசக்தி, தரவுகள் போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டுசெல்கின்றன. கடல்வழிப் பாதைகளைத் திறந்து வைத்திருப்பது, தொடர்புடைய அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகும்,” என்று அவர் உறுதியாகக் கூறினார்.

சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழக மத்திய கிழக்குக் கழகத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு சான், உலகப் பொருளியல், விலைகள், விநியோகத் தொடர்மீதான தாக்கத்தையும் எடுத்துரைத்தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அவை பழைய நிலைக்குத் திரும்பாமல் போகலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த நிச்சயமற்ற சூழல், உலகளாவிய முதலீட்டாளர் நம்பிக்கைக்கு மற்றுமோர் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

“உலகப் பொருளியல், வேலைவாய்ப்பு உருவாக்கம், ஊதிய வளர்ச்சி ஆகியவற்றின்மீது நீண்டகாலத் தாக்கங்களை விளைவிக்கலாம்,” என்று அமைச்சர் சான் எச்சரித்தார்.

“கடினமான மாற்றங்கள் ஏற்படும். ஆனால், அரசாங்கங்களும் வணிகங்களும் தகவமைத்துக்கொண்டு, இந்தச் சூழ்நிலையை நிர்வகிக்க இயலும்,” என்று அவர் உறுதியளித்தார்.

அண்மைய மோதல்கள், போருக்கான நியாயம், போரைத் தொடங்குவதற்கான வரம்பு ஆகியவை குறித்த விரிவான கேள்விகளை எழுப்புகின்றன என்றும் திரு சான் கூறினார்.

“புதிய, மலிவான மற்றும் பேரளவு உற்பத்தித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் சமநிலை அல்லாத போர்முறை மூலம், வலிமையற்றவை என்று கருதப்படும் நாடுகள், வலிமைமிக்க நாடுகளைக்கூட முடக்கி வைக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.

பெரிய நாடுகள் வலுவிழக்க நேர்ந்தால், மற்ற நாடுகள் மேலும் துணிச்சலான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு தூண்டப்படலாம்.

“இத்தகைய மாற்றம் அனைவருக்கும் ஆபத்தான, சவாலான ஒன்றாகும்,” என்று திரு சான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்