கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டோருக்குத் தீவெங்கும் உள்ள மருத்துவமனைகளில் கூடுதலாக 500 படுக்கைகளை 2040ஆம் ஆண்டுக்குள் ஒதுக்க சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.
மனநலச் சுகாதாரப் பராமரிப்புக்கான முயற்சிகளை விரிவுபடுத்த கூடுதல் படுக்கைகள் ஒதுக்கப்படுவதாகச் சுகாதார மூத்த துணையமைச்சர் கோ போ கூன் கூறினார்.
“மூப்படையும் சமூகம் அதிகரிக்கும் வேளையில், மனநல ஆரோக்கியத்துக்கான ஆதரவும் அதிகரிக்கிறது. எனவே கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் இருப்பதை உறுதிசெய்வோம்,” என்று டாக்டர் கோ குறிப்பிட்டார்.
கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டோருக்குக் குறுகிய காலப் பராமரிப்பை மருத்துவமனைகள் வழங்குகின்றன. அத்தகையோருக்கு மனநோய், உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணங்கள் போன்ற அறிகுறிகளைக் கையாள சிகிச்சை அளிக்கப்படும்.
சிங்கப்பூரின் மூன்று சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களில் கடுமையான மனநோயாளிகளுக்கான கூடுதல் படுக்கைகள் சேர்க்கப்படும். மனநல மருத்துவமனை, மறுவடிவமைக்கப்பட்ட அலெக்சாண்ட்ரா மருத்துவமனை ஆகியவற்றிலும் கூடுதல் படுக்கைகள் சேர்க்கப்படும்.
சிங்கப்பூரில் இருக்கும் 11 பொது மருத்துவமனைகளில் ஆறில் மட்டும் தற்போது உள்நோயாளிக்கான மனநலப் பராமரிப்பு வழங்கப்படுகிறது.
மனநலக் கழகம், டான் டோக் செங் மருத்துவமனை, தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, சாங்கி பொது மருத்துவமனை, சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை, செங்காங் மருத்துவமனை ஆகியவை அவற்றுள் அடங்கும்.
கடந்த ஆண்டு பிப்ரவரி நிலவரப்படி கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கென பொது மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 1,000 படுக்கைகள் ஒதுக்கப்பட்டன. மனநலக் கழகத்தில் 800க்கும் அதிகமான படுக்கைகள் ஒதுக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
2030ஆம் ஆண்டுக்குள் கடுமையான மனநோயாளிக்கென கிட்டத்தட்ட 1,070 படுக்கைகள் ஒதுக்கப்படும். அவற்றுள் கிட்டத்தட்ட 70 படுக்கைகள் மேம்படுத்தப்பட்ட அலெக்செண்ட்ரா மருத்துவமனையில் இருக்கும்.
சிங்கப்பூரில் 15 வயதிலிருந்து 35 வயதுக்கு உட்பட்ட மூன்றில் ஓர் இளையர் தீவிரமான அல்லது கடுமையான மன உளைச்சல், பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக மனநலக் கழகம் கடந்த ஆண்டு ஆய்வொன்றை வெளியிட்டது.
அதேவேளை, மறதியால் பாதிக்கப்பட்ட மூத்தோரின் எண்ணிக்கை 2013ஆம் ஆண்டு 51,934லிருந்து 2023ஆம் ஆண்டு 73,918க்கு அதிகரித்தது.